கட்சி மேலிட தலைவர்களை சந்திக்க டெல்லி செல்லவில்லை புதிய மந்திரிகளுக்கு நாளை இலாகாக்கள் ஒதுக்கப்படும் முதல்-மந்திரி எடியூரப்பா பேட்டி


கட்சி மேலிட தலைவர்களை சந்திக்க டெல்லி செல்லவில்லை   புதிய மந்திரிகளுக்கு நாளை இலாகாக்கள் ஒதுக்கப்படும்   முதல்-மந்திரி எடியூரப்பா பேட்டி
x
தினத்தந்தி 9 Feb 2020 3:45 AM IST (Updated: 8 Feb 2020 11:59 PM IST)
t-max-icont-min-icon

புதிய மந்திரிகளுக்கு நாளை (திங்கட்கிழமை) இலாகாக்கள் ஒதுக்கப்படும் என்றும், இதற்காக கட்சி மேலிட தலைவர்களை சந்திக்க டெல்லி செல்லவில்லை என்றும் முதல்-மந்திரி எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

பெங்களூரு, 

முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையிலான பா.ஜனதா ஆட்சியில் நீண்ட இழுபறிக்கு பின்பு கடந்த 6-ந் தேதி மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்பட்டது. அன்றைய தினம் இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற 10 எம்.எல்.ஏ.க்கள் மந்திரிகளாக பதவி ஏற்றுக் கொண்டனர். ஆனால் புதிய மந்திரிகளுக்கு இன்னும் இலாகாக்கள் ஒதுக்கப்படவில்லை. மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி தனக்கு நீர்ப்பாசனத்துறை வேண்டும் என்று முதல்-மந்திரி எடியூரப்பாவை வலியுறுத்தி வருகிறார். இதுபோல, பி.சி.பட்டீல் போலீஸ் துறை வேண்டும் என்றும், சோமசேகர் தனக்கு பெங்களூரு வளர்ச்சி துறை வேண்டும் என்றும் முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.

அதே நேரத்தில் ஏற்கனவே 2 துறைகளை வைத்துள்ள மந்திரிகள் ஒரு துறையை விட்டு கொடுக்க முன்வராமல் இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதனால் புதிய மந்திரிகளுக்கு இலாகாக்கள் ஒதுக்குவதில் காலதாமதம் ஏற்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில், புதிய மந்திரிகளுக்கு இலாகாக்கள் ஒதுக்குவது எப்போது? என்பது குறித்து பெங்களூரு விதானசவுதாவில் முதல்-மந்திரி எடியூரப்பாவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-

நாளை ஒதுக்கப்படும்

மந்திரிசபையில் புதிதாக 10 மந்திரிகள் இணைந்துள்ளனர். அந்த மந்திரிகளுக்கு இலாகாக்களை ஒதுக்குவதில் காலதாமதம் ஏற்பட்டு இருப்பதாக வரும் தகவல் உண்மை இல்லை. எந்த மந்திரிகளுக்கு, எந்த துறை ஒதுக்க வேண்டும் என்பது தொடர்பான பட்டியல் தயாராக உள்ளது.

வருகிற 10-ந் தேதி (அதாவது நாளை) மந்திரிகளுக்கு துறைகள் ஒதுக்கப்படும். இலாகாக்கள் ஒதுக்கும் விவகாரத்தில் எந்த விதமான பிரச்சினையும் இல்லை. இந்த விவகாரம் தொடர்பாக கட்சி மேலிட தலைவர்களை சந்தித்து பேச டெல்லிக்கும் செல்லவில்லை. அதனால் வருகிற 10-ந் தேதி மந்திரிகளுக்கு துறைகள் ஒதுக்கப்படும். சில மந்திரிகள் தங்களுக்கு குறிப்பிட்ட துறையை ஒதுக்க வேண்டும் என்று கேட்பது வாடிக்கையானது தான். அது அவர்களது விருப்பம்.

இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

Next Story