சாலையோரம் நின்ற வேன் மீது பஸ் மோதல்; 3 பெண்கள் பலி வடமாநில சுற்றுலா பயணிகளுக்கு நேர்ந்த துயரம்


சாலையோரம் நின்ற வேன் மீது பஸ் மோதல்; 3 பெண்கள் பலி வடமாநில சுற்றுலா பயணிகளுக்கு நேர்ந்த துயரம்
x
தினத்தந்தி 9 Feb 2020 5:00 AM IST (Updated: 9 Feb 2020 12:48 AM IST)
t-max-icont-min-icon

சாலையோரம் நின்ற வேன் மீது பஸ் மோதிய விபத்தில் 3 பெண்கள் பலியானார்கள். மேலும் அவர்களுடன் வந்த 10 பேர் காயம் அடைந்தனர். வடமாநிலத்தில் இருந்து சுற்றுலா வந்தவர்களுக்கு இந்த துயரம் நிகழ்ந்தது.

மதுரை,

அரியானா மாநிலம் சாஜர் மாவட்டம் பகதூர் பகுதியைச் சேர்ந்த 41 பேர் ரெயில் மூலம் தமிழ்நாட்டுக்கு சுற்றுலா வந்தனர். கடந்த 6-ந் தேதி டெல்லி நிஜாமுதீனில் இருந்து ரெயிலில் இருந்து புறப்பட்ட அவர்கள் நேற்று அதிகாலை மதுரை ரெயில் நிலையத்தை வந்தடைந்தனர். பின்னர் மதுரையில் இருந்து கன்னியாகுமரிக்கு 2 வேன்களில் புறப்பட்டனர். அந்த வேன்கள் திருமங்கலம் அருகே உள்ள நேசநேரி கண்மாய் அருகே சென்றன. ஒரு வேன் முன்னால் சென்றுவிட்டது. பின்னால் சென்ற வேனை கண்மாய் கரை ஓரம் டிரைவர் நிறுத்தினார். அதில் இருந்து சிலர் இறங்கினர். இந்த நிலையில், கோவையில் இருந்து நெல்லை மாவட்டம் களக்காடுக்கு சுற்றுலா செல்வதற்காக பஸ் ஒன்று வந்தது. அந்த பஸ் எதிர்பாராதவிதமாக சாலையோரம் நின்ற வேன் மீது பயங்கரமாக மோதியது.

3 பெண்கள் பலி

மோதிய வேகத்தில் வேன் சாலையை விட்டு கீழே கவிழ்ந்தது. அப்போது வேனின் உள்ளே இருந்தவர்கள் தங்களை காப்பாற்றும்படி அலறினர். அந்த சத்தம் கேட்டு அந்த பகுதியை சேர்ந்தவர்கள் ஓடிவந்தனர். தகவல் அறிந்து திருமங்கலம் தாலுகா போலீசாரும், தீயணைப்பு படையினரும் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். வேனில் இருந்த சாயர் (வயது 60) என்ற பெண் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் வேனில் இருந்து மீட்கப்பட்ட ரத்னாதேவி(62), சையத்ரத்னா (62) ஆகிய பெண்களும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டனர். அவர்கள் திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தனர்.

10 பேர் காயம்

மேலும் 10 பேர் காயத்துடன் மீட்கப்பட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

Next Story