தொழில் அதிபர் வீட்டில் ரூ.1 கோடி நகைகள் திருடிய வேலைக்கார பெண் கைது
தொழில் அதிபர் வீட்டில் ரூ.1 கோடி தங்க, வைர நகைகள் திருடிய வேலைக்கார பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
மும்பை,
மும்பை ஜூகு பகுதியை சேர்ந்தவர் நிலேஷ் ரதி(வயது45). தொழில் அதிபர். கடந்த சில நாட்களுக்கு முன்பு நிலேஷ் ரதி தனது வீட்டின் அலமாரியில் வைத்திருந்த மோதிரம் மாயமாகி இருந்தது. இதனால் அவர் அலமாரி முழுவதும் தேடிப்பார்த்தார். அப்போது அலமாரியில் வைத்திருந்த மேலும் பல தங்க, வைர நகைகள் காணாமல் போயிருப்பதை கண்டு அதிர்ச்சிக்குள்ளானார்.
காணாமல் போன நகைகளின் மதிப்பு ரூ.1 கோடி என்பதால், இதுகுறித்து தொழில் அதிபர் ஜூகு போலீசில் புகார் அளித்தார்.
வேலைக்கார பெண் கைது
போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது வீட்டின் வேலைக்கார பெண் செம்பூரை சேர்ந்த சுமன் பவார் (35), தொழில் அதிபரின் வீட்டில் இருந்த நகைகளை திருடியது தெரியவந்தது. சுமன் பவார் தொழில் அதிபரின் 70 வயது தாயை பராமரிக்கும் வேலையை செய்து வந்தார். அப்போது அவர், வீட்டில் எப்போதும் திறந்தநிலையில் இருக்கும் அலமாரியில் அதிகளவு தங்க, வைர நகைகள் இருப்பதை பார்த்து உள்ளார்.
இதையடுத்து அவர் தினமும் வேலை முடிந்து செல்லும் நேரத்தில் அலமாரியில் இருந்து கொஞ்சம், கொஞ்சமாக நகைகளை திருடி சென்று இருக்கிறார்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார், வேலைக்கார பெண் சுமன் பவாரை கைது செய்தனர். மேலும் அவரது வீட்டில் இருந்து ரூ.1 கோடி தங்க, வைர நகைகளை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story