என்னை மத நிகழ்ச்சிகளுக்கு அழைக்க கூடாது என கூறுவதா? வர்காரி அமைப்புக்கு சரத்பவார் பதிலடி


என்னை மத நிகழ்ச்சிகளுக்கு அழைக்க கூடாது என கூறுவதா?   வர்காரி அமைப்புக்கு சரத்பவார் பதிலடி
x
தினத்தந்தி 9 Feb 2020 4:15 AM IST (Updated: 9 Feb 2020 4:51 AM IST)
t-max-icont-min-icon

என்னை மத நிகழ்ச்சிகளுக்கு அழைக்க கூடாது என கூறிய வர்காரி அமைப்புக்கு சரத்பவார் பதிலடி கொடுத்து உள்ளார்.

மும்பை, 

மராட்டியத்தில் உள்ள ‘ராஷ்டிரீய வர்காரி பரிஷத்' என்ற அமைப்பு அண்மையில் ஒரு அறிக்கையை வெளியிட்டது. அந்த அறிக்கையில், ‘சரத்பவார் ராமாயணம் தேவையில்லை என்று கூறுகிறார். தெய்வங்கள், புனிதர்கள், இந்து மதத்தை அவமதிப்பவர்களை அவர் ஆதரிக்கிறார். எனவே பண்டர்பூர் விட்டல் சாமி கோவில் உள்ளிட்ட கோவில்களுக்கு ஆன்மிக யாத்திரை மேற்கொள்ளும் வர்காரிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

இதுபோன்ற அரசியல்வாதிகளை மத நிகழ்ச்சிகளுக்கோ, சொற்பொழிவுகளுக்கோ அழைப்பதை நிறுத்த வேண்டும். நாம் இந்துக்கள் என்பதை எப்போதும் வர்காரிகள் நினைவில் கொள்ள வேண்டும்' என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்தநிலையில், தன்னை மதநிகழ்ச்சிகளுக்கு அழைக்க கூடாது என்று கூறிய ராஷ்டிரீய வர்காரி பரிஷத் அமைப்புக்கு சரத்பவார் பதிலடி கொடுத்து உள்ளார்.

புனேயில் உள்ள ஆன்மிக தலமான அலாண்டியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் சரத்பவார் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

அனுமதி தேவையில்லை

கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்வதற்கு யாருடைய அனுமதியையும் பெற வேண்டிய அவசியமில்லை. நீங்கள் (கூட்டத்தினர்) விட்டல்சாமியை வணங்க விரும்பினால் பண்டர்பூர் செல்லுங்கள். ஞானேஸ்வர், துக்காராம் ஆகியோரை தரிசிக்க விரும்பினால் அலாண்டி, தெகுவிற்கு செல்லலாம். இதற்கு யாருடைய அனுமதியும் தேவையில்லை.

இந்த இடங்களுக்கு செல்ல உங்களுக்கு அனுமதி இல்லை என்று யாராவது சொன்னால், வர்காரி சிந்தனை அவர்களுக்குப் புரியவில்லை என்று நான் நினைக்கிறேன். ஒரு உண்மையான வர்காரி ஒருபோதும் அத்தகைய நிலைப்பாட்டை எடுக்க மாட்டார். இதுபோன்ற விஷயங்களை நாம் புறக்கணித்து நமது சொந்த விருப்பங்களை பின்பற்ற வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story