ராமேசுவரம் வந்த சீன ஆசிரியரால் பரபரப்பு உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டார்


ராமேசுவரம் வந்த சீன ஆசிரியரால் பரபரப்பு உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டார்
x
தினத்தந்தி 9 Feb 2020 5:00 AM IST (Updated: 9 Feb 2020 2:47 AM IST)
t-max-icont-min-icon

ராமேசுவரத்துக்கு சாமி தரிசனம் செய்வதற்காக வந்த சீன ஆசிரியரால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அவர் அங்கிருந்து அனுப்பி வைக்கப்பட்டார்.

ராமேசுவரம்,

சீனாவில் கொரோனா வைரசால் பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு ஏராளமானோர் இறந்துள்ளனர். இந்த நோய் பரவி வருவதால் சீனாவில் இருந்து இந்தியாவுக்கு வருபவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றனர்.

இந்த நிலையில் நேற்று ராமேசுவரம் தனியார் விடுதி ஒன்றில் வெளிநாட்டை சேர்ந்த ஒருவர் ஆன்லைன் மூலம் அறை பதிவு செய்திருந்தார். அதனை தொடர்ந்து நேற்று காலை 9 மணிக்கு அவர் அந்த தங்கும் விடுதிக்கு வந்தார். அவரது பாஸ்போர்ட்டை சரி பார்த்தபோது அவர் சீனாவில் இருந்து வந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து உடனடியாக அந்த விடுதியின் மேலாளர், இதுகுறித்து போலீசார் மற்றும் மருத்துவ அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

ஆசிரியர்

உடனே ராமேசுவரம் தாசில்தார் அப்துல் ஜப்பார், ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் பிரசாந்த் மற்றும் மருத்துவ குழுவினர் அங்கு வந்து போலீசார் உதவியுடன் அவரை பரிசோதித்தனர். அப்போது அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்பது தெரியவந்தது. ஆனாலும் அவரிடம் புலனாய்வு துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் பெயர் செங்குஸ் (வயது 30) என்பதும், சீனாவில் ஆன்கியு மாகாணம் குயனன் பகுதியை சேர்ந்தவர் என்பதும், அங்கு ஆசிரியராக பணியாற்றி வருவதும் தெரிவந்தது.

அவரிடம் நடத்திய விசாரணையில், இந்தியாவில் கோவில்களில் தரிசனம் செய்வதற்காக கடந்த மாதம் 28-ந்தேதி விமானம் மூலம் கொல்கத்தா விமான நிலையத்தில் வந்திறங்கியதாகவும், அங்கு மருத்துவ குழுவினர் தன்னை உடல் பரிசோதனை செய்து நோய் பாதிப்பு இல்லை என்று கூறி அனுமதித்ததாகவும் தெரிவித்தார்.

அதன் பின்னர் விமானம் மூலம் சென்னை வந்து அங்கிருந்து சீர்காழி, தஞ்சாவூர் ஆகிய ஊர்களில் கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்ததாகவும், பின்பு திருவண்ணாமலைக்கு சென்றுவிட்டு பஸ் மூலம் ராமேசுவரம் வந்ததாக தெரிவித்தார். அவர் இந்த ஆண்டு நவம்பர் மாதம் வரை இந்தியாவில் தங்குவதற்காக விசா பெற்றிருக்கிறார்.

அனுமதி மறுப்பு

இந்த நிலையில் மருத்துவ குழுவினர் இதுதொடர்பாக ராமநாதபுரத்தில் உள்ள மருத்துவ துணை இயக்குனர் குமரகுருபரனை தொடர்பு கொண்டு சீன ஆசிரியரின் புகைப்படத்தை வாட்ஸ்-அப் மூலம் அனுப்பி வைத்தனர். பின்னர் அவரது ஆலோசனையின் பேரில் பாதுகாப்பு கருதியும், முன்எச்சரிக்கை நடவடிக்கையாகவும், சீன ஆசிரியர் செங்குசை ராமேசுவரத்தில் தங்குவதற்கு அனுமதிக்காமல் உடனடியாக கார் மூலம் மதுரைக்கு அழைத்து வந்தனர். அவரை சென்னை அனுப்ப முடிவு செய்துள்ளனர். அவரை பின்தொடர்ந்து மருத்துவ குழுவினரும், போலீசாரும் மற்றொரு வாகனத்தில் மதுரை வந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story