பவுர்ணமி நிலவு ஒளியில் நடந்த மீனாட்சி-சுந்தரேசுவரர் தெப்ப திருவிழா பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்


பவுர்ணமி நிலவு ஒளியில் நடந்த மீனாட்சி-சுந்தரேசுவரர் தெப்ப திருவிழா பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
x
தினத்தந்தி 8 Feb 2020 10:30 PM GMT (Updated: 8 Feb 2020 9:30 PM GMT)

பவுர்ணமி நிலவு ஒளியில் கோலாகலமாக நடந்த மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் தெப்ப திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மதுரை,

உலகப்புகழ் வாய்ந்த மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். இதில் தை மாத தெப்ப திருவிழாவானது, முக்கிய விழாக்களில் ஒன்றாகும். இந்த ஆண்டுக்குரிய தெப்ப திருவிழா கடந்த மாதம் 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவின் ஒரு பகுதியாக நேற்று முன்தினம் அனுப்பானடி சிந்தாமணியில் கதிரறுப்பு வைபவம் நடைபெற்றது. இதையொட்டி மீனாட்சி அம்மனும், சுந்தரேசுவரர் கோவிலில் இருந்து புறப்பாடாகி சிந்தாமணியில் உள்ள கதிரறுப்பு மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப திருவிழா நேற்று நடந்தது.

தெப்பத்தில் எழுந்தருளல்

இதையொட்டி மீனாட்சி அம்மன் வெள்ளி அவுதா தொட்டிலிலும், சுந்தரேசுவரர் வெள்ளி சிம்மாசனத்திலும் எழுந்தருளி கோவிலில் இருந்து நேற்று காலை 5.30 மணிக்கு புறப்பட்டனர். அதாவது, நான்கு சித்திரை வீதிகளை வலம் வந்து, அம்மன் சன்னதி, கீழமாசி வீதி, யானைக்கல், கீழவெளிவீதி, முனிச்சாலை ரோடு, காமராஜர் சாலை வழியாக தெப்பக்குளம் அருகே உள்ள முக்தீஸ்வரர் கோவிலை சென்றடைந்தனர்.

அங்கு சிறப்பு தீபாராதனை நடந்து எதிரே உள்ள தெப்பக்குளம் சென்று அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளினார்கள். அங்கு சிறப்பு பூஜை நடந்தது. அதை தொடர்ந்து பகல் 11.15 மணிக்கு பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தெப்பக்குளத்தை தெப்பம் 2 முறை வலம் வந்தது. அதன்பின்னர் தெப்பக்குளத்தில் உள்ள மைய மண்டபத்தில் சுவாமி-அம்மன் எழுந்தருளினார்கள். அங்கு மாலையில் சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது.

பவுர்ணமி நிலவு ஒளியில்...

இரவில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சுவாமி-அம்மன் எழுந்தருளி தெப்பத்தை மீண்டும் ஒரு முறை வலம் வந்தனர். பவுர்ணமி நிலவு ஒளியில் தெப்ப திருவிழா நடைபெற்றதை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அங்கு கூடியிருந்து தரிசனம் செய்தனர். அதன்பின்னர் சுவாமி-அம்மன் அங்கிருந்து புறப்பாடாகி கோவிலை வந்தடைந்தனர்.

விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் நடராஜன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர். தெப்பத்திருவிழாவை முன்னிட்டு மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் தெப்பக்குளத்திற்குள் தீயணைப்பு வீரர்கள் படகுகளில் சென்று பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர். திருவிழாவையொட்டி அந்த பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது. மேலும் தெப்பத்திருவிழாவையொட்டி மீனாட்சி அம்மன் கோவில் நடை சாத்தப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.



Next Story