அனுப்பர்பாளையத்தில் 4 பாத்திர பட்டறைகளில் தீப்பிடித்தது ரூ.8 லட்சம் பொருட்கள் சேதம்


அனுப்பர்பாளையத்தில் 4 பாத்திர பட்டறைகளில் தீப்பிடித்தது ரூ.8 லட்சம் பொருட்கள் சேதம்
x
தினத்தந்தி 9 Feb 2020 4:30 AM IST (Updated: 9 Feb 2020 3:17 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் அனுப்பர்பாளையத்தில் 4 பாத்திர பட்டறைகளில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.8 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்தது.

அனுப்பர்பாளையம்,

திருப்பூர் அனுப்பர்பாளையம் மற்றும் சுற்று வட்டாரத்தில் 300-க்கும் மேற்பட்ட பாத்திர உற்பத்தி பட்டறைகள் உள்ளன. அங்கு ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று அதிகாலை 3 மணிக்கு அனுப்பர்பாளையத்தை அடுத்த மாதம்பாறை பகுதியில் உள்ள பாத்திர பட்டறையில் இருந்து கரும்புகை வெளியாகி உள்ளது.

சிறிது நேரத்தில் அந்த பட்டறை முழுவதும் தீப்பிடித்து எரிந்ததுடன், அருகில் உள்ள 3 பட்டறைகளுக்கும் பரவி, தீ மளமளவென எரிய தொடங்கியது. இதை கண்ட அக்கம்பக்கத்தினர் திருப்பூர் வடக்கு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அங்கு விரைந்து சென்ற தீயணைப்புத்துறை அதிகாரிகள் தண்ணீரை அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

ரூ.8 லட்சம் பொருட்கள் சேதம்

நீண்ட நேர போராட்டத்திற்கு பின்பு தீயை முற்றிலுமாக அணைத்தனர். இதில் 4 பட்டறைகளிலும் இருந்த சுமார் ரூ.8 லட்சம் மதிப்பிலான எவர்சில்வர், செம்பு உள்ளிட்ட பாத்திரங்களும், பாத்திரங்களுக்கு பாலீஸ் போடும் எந்திரங்களும் முற்றிலும் சேதம் அடைந்தன. இதுகுறித்து தகவலறிந்த 15 வேலம்பாளையம் போலீசார் மற்றும் கிராம நிர்வாக அதிகாரி பண்ணாரி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.

இதில் தீ விபத்து ஏற்பட்ட 4 பட்டறைகளும் மாரி, முருகேஷ், செல்வராஜ், மோகன் ஆகியோருக்கு சொந்தமான எவர்சில்வர், செம்பு பாத்திரங்களுக்கு பாலீஸ் போடும் பட்டறைகள் என்பது தெரிய வந்தது. மேலும் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

நஷ்டஈடு வழங்க கோரிக்கை

பாத்திர பட்டறைகள் உள்ள இடத்தை நில வாடகைக்கு எடுத்தும், கடன் வாங்கியும் தொழில் செய்து வரும் நிலையில் இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பாத்திரங்களும், எந்திரங்களும் சேதமடைந்ததன.

இதனால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே பாத்திர உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் நலன் கருதி தமிழக அரசு உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று பாத்திர பட்டறைதாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story