வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம்: தாய், மகனை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியல் - செஞ்சி அருகே பரபரப்பு


வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம்: தாய், மகனை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியல் - செஞ்சி அருகே பரபரப்பு
x
தினத்தந்தி 9 Feb 2020 10:15 PM GMT (Updated: 9 Feb 2020 5:04 PM GMT)

செஞ்சி அருகே வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், அவரது தற்கொலைக்கு தூண்டுதலாக இருந்த தாய், மகனை கைது செய்ய வேண்டும் என்று கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

செஞ்சி,

செஞ்சி அடுத்த வி.நயம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் விஜயரங்கன். இவரது மகன் பெருமாள்(வயது 28). இவர் சிங்கப்பூரில் கடந்த 5 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்த நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்தார். இந்த நிலையில் கடந்த 6-ந்தேதி பெருமாள் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து அவரது அக்காள் தேவி சத்தியமங்கலம் போலீசில் புகார் செய்தார். அதில், எனது தம்பி அதே ஊரை சேர்ந்த திருமலை மனைவி கண்ணியம்மாள், அவரது மகன் சூர்யா ஆகியோரிடம் ரூ.8½ லட்சம் மற்றும் 5½ பவுன் நகையை கொடுத்து வைத்திருந்தார். அதை திருப்பி தருமாறு கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் திருப்பி கொடுக்க மறுத்து விட்டனர். இதனால் மனமுடைந்த பெருமாள் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து தற்கொலைக்கு தூண்டியதாக கண்ணியம்மாள், சூர்யா ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில், இச்சம்பவத்தில் தொடர்புடைய தாய், மகனை உடனடியாக கைது செய்து, நகை பணத்தை மீட்டு தர வேண்டும் என்று கோரி பெருமாளின் உறவினர்கள் பா.ம.க. மாவட்ட துணை செயலாளர் ஜெயக்குமார் தலைமையில் பசுமை தாங்கல் கூட்டு ரோட்டில் ஆலம்பூண்டி-தேவதானம்பேட்டை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த சத்தியமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் இது தொடர்பாக உரிய விசாரணை நடந்து வருவதாகவும், விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் தரப்பில் தெரிவித்தனர். இதையேற்று அனைவரும் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதுடன், சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Next Story