சீர்காழி புதிய பஸ் நிலையத்திற்குள் அனைத்து பஸ்களும் வந்து செல்ல வேண்டும்


சீர்காழி புதிய பஸ் நிலையத்திற்குள் அனைத்து பஸ்களும் வந்து செல்ல வேண்டும்
x
தினத்தந்தி 10 Feb 2020 4:30 AM IST (Updated: 10 Feb 2020 12:45 AM IST)
t-max-icont-min-icon

சீர்காழி புதிய பஸ் நிலையத்திற்குள் அனைத்து பஸ்களும் வந்து செல்ல வேண்டும் என்று ஒன்றியக்குழு கூட்டத்தில் உறுப்பினர் கோரிக்கை விடுத்துள்ளார்.

சீர்காழி,

சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் கமலஜோதி தலைமை தாங்கினார். ஆணையர் ரெஜினாராணி, வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) கஜேந்திரன், மேலாளர் சசிகுமார், ஒன்றியக்குழு துணை தலைவர் உ‌ஷாநந்தினி பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்குமார் வரவேற்றார். கூட்டத்தில் உறுப்பினர்கள் இடையே நடந்த விவாதம் வருமாறு:-

நடைபாலம்

துணை தலைவர்:- ஒன்றிய பொதுநிதி எவ்வளவு உள்ளது? என்பதை தெரியப்படுத்த வேண்டும்.

நடராஜன் (அ.தி.மு.க.):- கடந்த 50 ஆண்டுகளாக திருவாலியில் உள்ள கூனக்கரம்பு வாய்க்காலில் பாலம் இல்லாததால் மாணவர்கள் வாய்க்காலில் இறங்கி நடந்து செல்லவேண்டிய அவலநிலை உள்ளது. எனவே வாய்க்காலில் நடைபாலம் அமைத்து தர வேண்டும்.

விசாகர் (தி.மு.க.):- அனைத்து பஸ்களும் சீர்காழி புதிய பஸ் நிலையத்திற்குள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜான்சிராணி (சுயே):- திருவெண்காடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 24 மணிநேரமும் டாக்டர்களை பணியில் அமர்த்தி பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அங்கன்வாடி மையம்

நிலவழகி (தி.மு.க.):- தென்னாம்பட்டினம்-கோணயாம்பட்டினம் இடையே நீர்குமிழி அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சோனியாகாந்தி (தி.மு.க.):- கோடங்கடி கிராமத்தில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விஜயகுமார் (அ.தி.மு.க.):- திட்டை, தில்லைவிடங்கள், புதுத்துறை ஆகிய ஊராட்சிகளில் சேதமடைந்த சாலைகளை சீரமைத்து, தட்டுப்பாடின்றி குடிநீர் வசதி செய்து தர வேண்டும்.

நடவடிக்கை எடுக்கப்படும்

தலைவர்:- ஒவ்வொரு உறுப்பினர்களும் தங்கள் பகுதிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை தேர்வு செய்து மனுக்களாக என்னிடமோ அல்லது ஆணையரிடமோ நேரில் கொடுக்கலாம். கட்சி பாகுபாடின்றி படிப்படியாக கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். வளர்ச்சி பணிகள் சம்பந்தமாக ஒன்றியக்குழு உறுப்பினர்கள் அனைவரும் மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

கூட்டத்தில் பொறியாளர்கள் முத்துக்குமார், தாரா, அருமைநாதன், மாவட்ட கவுன்சிலர்கள் விஜயேஸ்வரன், ஆனந்தன் மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பணி மேற்பார்வையாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன் நன்றி கூறினார்.



Next Story