‘எரிபொருட்களை பயன்படுத்தும்போது முறையான பாதுகாப்பு தேவை’ இந்தியன் ஆயில் நிர்வாக இயக்குனர் பேச்சு


‘எரிபொருட்களை பயன்படுத்தும்போது முறையான பாதுகாப்பு தேவை’ இந்தியன் ஆயில் நிர்வாக இயக்குனர் பேச்சு
x
தினத்தந்தி 10 Feb 2020 4:30 AM IST (Updated: 10 Feb 2020 1:32 AM IST)
t-max-icont-min-icon

எரிபொருட்களை பயன்படுத்தும்போது முறையான பாதுகாப்பை கடைபிடிக்க வேண்டும் என இந்தியன் ஆயில் நிர்வாக இயக்குனர் பி.ஜெயதேவன் தெரிவித்தார்.

சென்னை,

இந்தியன் ஆயில் நிறுவனம், இந்தியாவின் எண்ணெய் மற்றும் எரிவாயு பாதுகாப்பு தேவை, அதை உற்பத்தி செய்வதற்கான வழிமுறைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில் கடந்த மாதம் 16-ந் தேதியில் இருந்து வருகிற 15-ந்தேதி வரை ஒரு மாதம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்துகிறது.

அந்தவகையில் ‘எரிபொருளை வீணாக்காமல் சுற்றுச்சூழலை காப்பாற்றுவோம்’ என்ற கருப்பொருளை மையமாக வைத்து ‘தீ இல்லாமல் சமையல்’ என்ற போட்டி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் நடத்தப்பட்டது.

இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு தங்கள் சமையல் திறமைகளை வெளிப்படுத்தியதுடன், புதிய உணவு பொருட்களையும் காட்சிப்படுத்தியிருந்தனர். இது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

தொடர்ந்து எரிபொருள் பாதுகாப்பு குறித்து பள்ளி மாணவ, மாணவிகளுக்காக நடத்தப்பட்ட ஓவியப்போட்டியில் 450 பேர் கலந்து கொண்டனர். சிறப்பு திறன் கொண்ட குழந்தைகள் குழுவும் இந்த போட்டிகளில் பங்கேற்று தங்களுடைய கருத்துக்களை வெளிப்படுத்தினர்.

இந்தியன் ஆயில் நிர்வாக இயக்குனரும், மாநில தலைவருமான பி.ஜெயதேவன் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி பேசுகையில், ‘இளைய தலைமுறையினர் எரிபொருள் பயன்படுத்தும்போது முறையான பாதுகாப்பு பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும்’ என்றார்.

இந்த நிகழ்ச்சியில் தென்மண்டல எண்ணெய் நிறுவனத்தின் பொதுமேலாளர் (தகவல் தொடர்பு) ஆர்.சிதம்பரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story