நெய்வேலி என்.எல்.சி. 2-வது சுரங்கம் முன்பு வேன் மீது ஏறி நின்று ரசிகர்களுடன் ‘செல்பி’ எடுத்த விஜய் - கூட்ட நெரிசலால் தள்ளுமுள்ளு
நெய்வேலி என்.எல்.சி. 2-வது சுரங்கம் முன்பு வேன் மீது ஏறி நின்று ரசிகர்களுடன் விஜய் ‘செல்பி’ எடுத்தார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
மந்தாரக்குப்பம்,
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. 2-வது சுரங்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் மாஸ்டர் படப்பிடிப்பு கடந்த 5-ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது. ஆனால் என்.எல்.சி. சுரங்கத்தில் மாஸ்டர் படப்பிடிப்பு நடத்த எதிர்ப்பு தெரிவித்து கடந்த 7-ந் தேதி பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இது பற்றி அறிந்ததும் என்.எல்.சி. சுரங்கம் முன்பு திரண்ட விஜய் ரசிகர்கள், பா.ஜனதாவினரை கண்டித்தும், மாஸ்டர் படப்பிடிப்பை தொடர்ந்து இங்கேயே நடத்தக்கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். நேற்று முன்தினம் மாலையிலும் நடிகர் விஜய்யை காண்பதற்காக ரசிகர்கள் மற்றும் பெண்கள் ஏராளமானோர் 2-வது சுரங்கத்தின் முன்பு திரண்டனர். படப்பிடிப்பு முடிவடைந்து விஜய் வெளியே வருவதை அறிந்த அவர்கள் போலீசாரின் பாதுகாப்பு வளையத்தை மீறி சுரங்கத்தின் நுழைவு வாயிலை நோக்கி ஓடினர். அப்போதும் போலீசார் ரசிகர்களை விரட்டியடித்து கூட்டத்தை கலைத்தனர்.
இந்த நிலையில் நேற்றும் என்.எல்.சி. 2-வது சுரங்கத்தில் மாஸ்டர் படப்பிடிப்பு நடைபெற்றது. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் நடிகர் விஜய்யை காண ரசிகர்கள் மட்டுமின்றி 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்திருந்தனர். இதனால் பொதுமக்களின் கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக நெய்வேலி துணை போலீஸ் சூப்பிரண்டு லோகநாதன் தலைமையில் போலீசாரும், என்.எல்.சி. மத்திய தொழிலக பாதுகாப்பு படை தலைவர் ஷேக் அப்துல்லா தலைமையில் மத்திய தொழிலக பாதுகாப்பு படையினரும் குவிக்கப்பட்டிருந்தனர். மத்திய தொழிலக பாதுகாப்பு படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே கடந்த 2 நாட்களாக ரசிகர்கள் மீது தடியடி நடத்தப்பட்ட சம்பவத்தை அறிந்தும், ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்கவும், மாலையில் ரசிகர்களின் மத்தியில் நடிகர் விஜய் பேசுவார் என்று தகவல் பரவியது. அதற்கு ஏற்றார் போல் என்.எல்.சி. 2-வது சுரங்க நுழைவு வாயிலின் முன்பு வேன் ஒன்றும் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகமடைந்தனர். சில ரசிகர்கள் ஆள் உயர மாலையையும் தயார் நிலையில் வைத்திருந்தனர். இந்த நிலையில் மாலை 6.15 மணியளவில் படப்பிடிப்பு முடிந்ததும் நடிகர் விஜய், காரில் வெளியே வந்தார். பின்னர் அவர் தான் வந்த காரை சுரங்கத்தின் முன்பு நிறுத்திவிட்டு அதில் இருந்து இறங்கி, தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்த வேனில் ஏறி ரசிகர்களை நோக்கி கையசைத்தார். அப்போது அங்கு திரண்டு இருந்த ரசிகர்கள் தலைவா... தலைவா... என்று உற்சாக குரல் எழுப்பினர்.
தொடர்ந்து நடிகர் விஜய், தான் வைத்திருந்த செல்போனை எடுத்து ரசிகர்களுடன் ‘செல்பி’ எடுத்தார். இதைபார்த்த ரசிகர்கள் உற்சாகத்தில் திளைத்தனர். பின்னர் மீண்டும் ஒருமுறை ரசிகர்களை நோக்கி கையசைத்து விட்டு வேனில் இருந்து கீழே இறங்கினார். இதைதொடர்ந்து தனது காரில் ஏறி வெளியே வந்தார். நடிகர் விஜய் பேசுவார் என்று எதிர்பார்த்த ரசிகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
இதற்கிடையே நடிகர் விஜய் வெளியே வருவதை அறிந்த ரசிகர்கள் முண்டியடித்துக்கொண்டு அவரை காண ஓடினர். இதனால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த போலீசார் முயன்றபோது ரசிகர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. பின்னர் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story