ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி நடந்த கிரிக்கெட் போட்டியில் பந்து தாக்கி வாலிபர் சாவு


ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி நடந்த கிரிக்கெட் போட்டியில் பந்து தாக்கி வாலிபர் சாவு
x
தினத்தந்தி 10 Feb 2020 5:15 AM IST (Updated: 10 Feb 2020 1:54 AM IST)
t-max-icont-min-icon

ஜெயலலிதா பிறந்த நாளை யொட்டி நடந்த கிரிக்கெட் போட்டியில் பந்து தாக்கியதில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

மதுராந்தகம்,

செங்கல்பட்டு மாவட்டம் சூனாம்பேடு காலனி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மகன் சுனில் (வயது 20). டிரைவராக வேலை செய்து வந்தார். மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் வருகிற 24-ந் தேதி கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி சூனாம்பேடு அடுத்த அகரம் கிராமத்தில் அ.தி.மு.க. சார்பில் விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. நேற்று கிரிக்கெட் போட்டிகள் நடந்தன. இதில், சுனிலும் பங்கேற்று விளையாடினார். சுனில் பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது, பவுலர் வீசிய பந்து அவரது மார்பில் பலமாக தாக்கியது.

இதில் நிலைகுலைந்து போன சுனில் தரையில் சுருண்டு விழுந்தார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சக வீரர்கள் மற்றும் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து உடனடியாக சுனிலை மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சுனில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சுனிலின் தந்தை சுரேஷ் சூனாம்பேடு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தரனேஸ்வரி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

கிரிக்கெட் விளையாடும்போது பந்து தாக்கியதில் வாலிபர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story