தைப்பூச திருவிழாவையொட்டி குளித்தலையில், விடையாற்றி உற்சவம் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்


தைப்பூச திருவிழாவையொட்டி குளித்தலையில், விடையாற்றி உற்சவம் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்
x
தினத்தந்தி 10 Feb 2020 4:00 AM IST (Updated: 10 Feb 2020 2:16 AM IST)
t-max-icont-min-icon

குளித்தலையில் தைப்பூச திருவிழாவையொட்டி விடையாற்றி உற்சவம் நடைபெற்றது. இதில் திராளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

குளித்தலை,

கரூர் மாவட்டம், குளித்தலையில் தைப்பூச திருவிழாவையொட்டி குளித்தலை முற்றிலா முலையம்மை உடனுறை கடம்பவனேசுவரர், ராஜேந்திரம் தேவநாயகி உடனுறை மத்தியார்சுனேசுவரர், பெட்டவாய்த்தலை பாலாம்பிகை உடனுறை மத்தியார்சுனேசுவரர், அய்யர்மலை சுரும்பார்குழலி உடனுறை ரெத்தினகிரீசுவரர், திருஈங்கோய்மலை மரகதம்பாள் உடனுறை மரகதாசலேசுவரர், கருப்பத்தூர் சுகந்தகுந்தாளம்மன் உடனுறை சிம்மபுரீசுவரர், முசிறி கற்பூரவல்லி உடனுறை சந்திரமவுலீசுவரர், வெள்ளூர் சிவகாமி உடனுறை திருக்காமேசுவரர் ஆகிய 8 கோவில்களின் சுவாமிகளுக்கும் சிறப்பு பூஜைகள் நேற்று முன்தினம் நடைபெற்றன.

இதன்பின்னர் சிறப்பு அலங்காரத்தில் கோவில்களின் உற்சவமூர்த்திகள் ஊர்வலமாக குளித்தலை கடம்பந்துறை காவிரிக்கரைக்கு கொண்டு செல்லப்பட்டு இரவு தீர்த்தவாரி நடைபெற்றது. இதன்பின்னர் இங்குள்ள திடலில் அமைக்கப்பட்டிருந்த பந்தலில் ரி‌‌ஷப வாகனத்தில் 8 ஊர் சுவாமிகளும் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

விடையாற்றி உற்சவம்

இதனைத்தொடர்ந்து நேற்று மதியம் சுவாமிகளின் சந்திப்பு காவிரிக்கரையில் நடைபெற்றது. இதையடுத்து முற்றிலா முலையம்மை உடனுறை கடம்பவனேசுவரர் உள்பட மற்ற சுவாமிகளுக்கும் காவிரி ஆற்றுப்பகுதி, பஸ் நிலையம், கடம்பர்கோவில் உள்ளிட்ட பகுதியில் விடையாற்றி அனுப்பும் உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விடையாற்றி உற்சவத்தில் ஒவ்வொரு ஊர் சுவாமிக்கும் சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன. இதையடுத்து இந்த 8 ஊர் சுவாமிகளும் அந்தந்த கோவில்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. சுவாமிகள் சென்ற பகுதிகளில் பல்வேறு அரசு துறையினர், பொதுமக்கள் உள்ளிட்டோர் சிறப்பு அர்ச்சனைகள் செய்து வழிபட்டனர். தைப்பூச திருவிழாவையொட்டி பல்வேறு ஊர்களில் இருந்து திரளான பக்தர்கள், பொதுமக்கள் குளித்தலைக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர்.

Next Story