ஆம்பூர் நகராட்சியில் ரூ.7½ கோடியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - பொதுமக்கள் குப்பைகளை தரம்பிரித்து வழங்க வேண்டுகோள்
ஆம்பூர் நகராட்சியில் ரூ.7½ கோடியில் 2 இடங்களில் திடக்கழிவு மேலாண்மைதிட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. எனவே பொதுமக்கள் குப்பைகளை தரம்பிரித்து வழங்க நகராட்சி ஆணையாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஆம்பூர்,
ஆம்பூர் நகராட்சியில் ரெட்டிதோப்பு மற்றும் தார்வழி ஆகிய பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. அதனை நகராட்சி ஆணையாளர் சவுந்தரராஜன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். துப்புரவு அலுவலர் பாஸ்கர் மற்றும் துப்புரவு ஆய்வாளர் உடன் இருந்தனர்.
இதுதொடர்பாக நகராட்சி ஆணையாளர் கூறியதாவது:-
ரூ.7½ கோடியில் அமைக்கப்பட உள்ள திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை வேலூர் மண்டல நகராட்சி நிர்வாக இயக்குனர் ஆய்வு செய்து வழங்கிய வழிகாட்டுதலின்படி பல்வேறு மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளது. ஆம்பூர் நகரை குப்பை இல்லாத நகரமாக்க திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின்கீழ், குப்பைகளை தெருவில் கொட்டாமல் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம்பிரித்து நகராட்சி பணியாளர்கள் வரும்போது அவர்களிடம் வழங்கிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் மழைநீர் கட்டமைப்பு வசதிகள், பிளாஸ்டிக் பயன்பாடு தவிர்ப்பு, குடிநீரை சேமிப்பது, பேனர், விளம்பர பதாகைகள் வைப்பதை தவிர்ப்போம். சொத்துவரி, தொழில்வரி, குடிநீர் இணைப்பு முன்வைப்பு தொகை செலுத்தி குடிநீர் இணைப்பை முறைபடுத்திக் கொள்ளவும். குடிநீர் கட்டணம் செலுத்தி இணைப்பு துண்டிப்பு தவிர்க்கவும், டெங்கு கொசுப்புழு உற்பத்தியாகாமல் தவிர்த்து, நகரின் தூய்மையை பாதுகாக்க அனைவரும் நகராட்சிக்கு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும்.
ஒருசிலர் நாங்கள் எதற்கு குப்பைகளை தரம் பிரித்து தரவேண்டும் என விவாதம் செய்து வருகிறார்கள். தரம்பிரித்து வழங்காவிட்டால் அபராதம் விதிக்க வழிவகை உண்டு. ஆனாலும் அவ்வாறான நடவடிக்கை எடுக்காமல் ஆம்பூர் நகராட்சி மக்களிடம் குப்பைகளை தரம் பிரித்து வழங்கி ஒத்துழைப்புத்தர வேண்டுகிறோம். குப்பைகளை தெருவில் கொட்டாமல், சுகாதாரத்தை பேணும் வகையில் தரம்பிரித்து நகராட்சி பணியாளர்களிடம் வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story