குடிநீர் வீணாவதை சரிசெய்யக்கோரி துணி துவைக்கும் போராட்டம் நடத்தியவரால் பரபரப்பு


குடிநீர் வீணாவதை சரிசெய்யக்கோரி துணி துவைக்கும் போராட்டம் நடத்தியவரால் பரபரப்பு
x
தினத்தந்தி 10 Feb 2020 3:38 AM IST (Updated: 10 Feb 2020 3:38 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் குடிநீர் வீணாவதை சரிசெய்யக்கோரி துணி துவைக்கும் போராட்டம் நடத்தியவரால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர்,

திருப்பூர்-காங்கேயம் ரோடு வெங்கடேஷ்வரா நகர் பகுதியில் பாலம் அருகே ஒரு குடிநீர் குழாய் உள்ளது. இந்த குடிநீர் குழாய் மூலம் அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் மற்றும் நல்லூர் பகுதியை சேர்ந்தவர்கள் பலர் பயன்பெற்று வருகிறாா்கள். இந்த தண்ணீரை தங்களது அடிப்படை வசதிகளுக்கு பயன்படுத்தி வந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில் இந்த பகுதியில் உள்ள குடிநீர் குழாய் கடந்த ஒரு மாதமாக உடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் அந்த பகுதியில் உள்ள சாலைகளில் வீணாகி வந்துள்ளது. இது குறித்து அப்பகுதியை சேர்ந்த 44-வது வார்டு முன்னாள் தி.மு.க. செயலாளர் ஜியாவுல் ஹக் (வயது 34) என்பவர் பலமுறை திருப்பூர் மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்துள்ளார். ஆனால் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதற்கிடையே குடிநீர் வீணாவதை சரிசெய்யக்கோரியும், மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் நேற்று மாலை வெங்கடேஷ்வராநகர் பகுதியில் குடிநீர் வீணாகி ரோட்டில் சென்று கொண்டிருந்த இடத்தில் தனது சட்டை மற்றும் பனியன்கள் உள்ளிட்டவற்றை சோப்பு போட்டு துணிகளை துவைத்தார். அத்துடன் அங்கேயே குளித்தார். ஜியாவுல் ஹக் நூதன முறையில் போராட்டம் நடத்தினார். அத்துடன் அவருக் கு ஆதரவாக சிலரும் திரண்டனர். இதன் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து ஜியாவுல் ஹக் கூறியதாவது:-

எங்களது பகுதியில் கடந்த ஒரு மாதமாக குடிநீர் வீணாகி வருகிறது. மாநகர் பகுதியில் பல இடங்களில் குடிநீர் பற்றாக்குறை இருந்து வருகிறது. இதன் காரணமாக இந்த குழாய் உடைப்பை சரி செய்ய வேண்டும் என பலமுறை மாநகராட்சி அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்து வந்தோம்.

ஆனால் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. கடந்த ஒரு மாதமாக பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாகியுள்ளது. இதனால் மாநகராட்சியை கண்டித்து எனது துணிகளை துவைத்து போராட்டத்தில் ஈடுபட்டேன். இதன் பின்னரும் எந்த அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அடுத்தகட்ட போராட்டங்கள் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இதுபோல் கடந்த 4-ந் தேதி திருப்பூர் பங்களா பஸ் நிறுத்தம் அருகில் குடிநீர் வீணாவதை கண்டித்து சமூக ஆர்வலர் சந்திரசேகரன் என்பவர், அந்த தண்ணீர் தேங்கிய குழியில் இறங்கி சோப்பு போட்டு குளித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story