குப்பை கழிவுகள் சேராமல் சுற்றுச்சூழலை பாதுகாக்க புதிய முயற்சி: பழ தோல்களை குவளைகளாக மாற்றி பழச்சாறு வழங்கும் வியாபாரி
பெங்களூருவில் குப்பை கழிவுகளை நிர்வகிக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பழ தோல்களை குவளைகளாக மாற்றி பழச்சாறு வழங்கும் வியாபாரி.
பெங்களூரு,
தற்போது மக்கும் குப்பை, மக்காத குப்பை என பொதுமக்களே தரம் பிரித்து குப்பைகளை கொட்ட வேண்டும் என்று பெங்களூரு மாநகராட்சி அறிவித்து, அதை செயல்படுத்தியும் வருகிறது.
மேலும் பொது இடங்களில் குப்பை கழிவுகளை கொட்டுபவர்களுக்கு அபராதம் விதித்தும் வருகிறது. இப்படி குப்பை கழிவுகளால் பெரிய பிரச்சினை இருந்து வரும் நிலையில் சில்வர், பிளாஸ்டிக் டம்ளர்களுக்கு பதிலாக பழ தோல்களையே குவளைகள் போல் உருவாக்கி வியாபாரி ஒருவர் பழச்சாறு விற்று வருவது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதுபற்றிய விவரம் வருமாறு:-
பெங்களூரு மல்லேசுவரத்தில் பழச்சாறு விற்பனை கடை வைத்திருக்கும் ஒரு என்ஜினீயரிங் பட்டதாரி, தனது கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு புதிய முறையிலும், சில்வர், பிளாஸ்டிக் டம்ளர்களை பயன்படுத்தாமலும் பழச்சாறு வழங்கி அசத்தி வருகிறார்.
அதாவது பழங்களை பாதியளவு வெட்டி, பழத்தை கரண்டியால் எடுத்துக்கொண்டு தோல் பகுதியை குவளைகள் போல் உருவாக்கி அதில் பழச்சாற்றை ஊற்றி வாடிக்கையாளர்களுக்கு தருகிறார்.
அதை வியப்புடன் பார்க்கும் வாடிக்கையாளர்கள் பழச்சாற்றை குடித்து மகிழ்கிறார்கள். இதன்மூலம் தனது கடையில் குப்பை கழிவுகள் அதிகம் சேர்வதில்லை என்றும், இந்த புதிய முயற்சி சுற்றுச்சூழலையும் பாதுகாக்கும் என்றும் அவர் கூறுகிறார். மேலும் அவர் கூறுகையில், ‘‘நான் பல ஆண்டுகளாக பழச்சாறு கடை நடத்தி வருகிறேன். நானும் முதலில் காகித டம்ளர்கள், பிளாஸ்டிக் டம்ளர்களில்தான் வாடிக்கையாளர்களுக்கு பழச்சாறு கொடுத்தேன். அதன்மூலம் என் கடையில் ஏராளமான குப்பை கழிவுகள் சேர்ந்தன. தினமும் அவற்றை அகற்றுவது எனக்கு பெரும் சவாலாக இருந்தது. அதனால்தான் இந்த புதிய முயற்சியை மேற்கொண்டேன். இது வாடிக்கையாளர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. என் கடையைத்தேடி ஏராளமான வாடிக்கையாளர்கள் வருகிறார்கள்’’ என்று கூறினார்.
அவருடைய இந்த புதிய முயற்சியை பலரும் பாராட்டி வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இவருடைய கடையில் ஆப்பிள், மாதுளை, திராட்சை, கொய்யாப்பழம் உள்பட அனைத்து வகையான பழச்சாறுகளும் இதேபோல் குவளைகளாக மாற்றப்பட்ட பழ தோல்களில் ஊற்றி வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story