துமகூரு அருகே பெண்ணுக்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்ததால் குழந்தை இறந்தது தம்பதிக்கு எச்.ஐ.வி. பாதிப்பு மறைக்க முயன்றதால் நடந்த பரிதாபம்


துமகூரு அருகே  பெண்ணுக்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்ததால் குழந்தை இறந்தது தம்பதிக்கு எச்.ஐ.வி. பாதிப்பு மறைக்க முயன்றதால் நடந்த பரிதாபம்
x
தினத்தந்தி 10 Feb 2020 4:24 AM IST (Updated: 10 Feb 2020 4:24 AM IST)
t-max-icont-min-icon

துமகூரு அருகே பெண்ணுக்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்ததால் பிறந்த குழந்தை இறந்தது. தம்பதிக்கு எச்.ஐ.வி. பாதிப்பு இருந்ததை மறைக்க முயன்றதால் இந்த பரிதாபம் நடந்துள்ளது.

துமகூரு,

துமகூரு (மாவட்டம்) புறநகர் மகாலட்சுமி நகர் பகுதியில் ஒரு தம்பதி வசித்து வருகின்றனர். பீகார் மாநிலத்தை சேர்ந்த அந்த தம்பதி கூலி வேலை செய்து வருகிறார்கள். அந்த தம்பதிக்கு ஒரு மகனும், பெண் குழந்தையும் உள்ளனர். இதற்கிடையில், அந்த பெண் மீண்டும் கர்ப்பம் அடைந்தார். நிறைமாத கர்ப்பிணியான அவர் கடந்த சில மாதங்களாக வீட்டை விட்டு வெளியே வராமலும், வேலைக்கு செல்லாமலும் இருந்தார். சில மாதங்களுக்கு முன்பு அந்த பெண் வெளியே செல்லும் போது வயிறு பெரிதாக இருப்பதை பார்த்து அக்கம் பக்கத்தில் வசிக்கும் பெண்கள், கர்ப்பம் அடைந்திருப்பது பற்றி கேட்டுள்ளனர். ஆனால் இல்லை என்று அவர் கூறியுள் ளார்.

இதனால் அக்கம் பக்கத்தில் வசிக்கும் பெண்களும் இதனை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் அந்த பெண் வசிக்கும் வீட்டில் இருந்து, அவர் கதறி அழும் சத்தம் தொடர்ந்து கேட்ட வண்ணம் இருந்தது. அந்த சந்தர்ப்பத்தில் அப்பெண்ணின் மகன் வீட்டில் இருந்து வெளியே வந்துள்ளான்.

அவனுக்கு பக்கத்து வீட்டு பெண் சாக்லெட் கொடுத்துவிட்டு, உனது தாய் அழும் சத்தம் கேட்கிறது எதற்காக அழுகிறார் என்று கேட்டுள்ளார். அப்போது தாய்க்கு குழந்தை பிறந்திருப்பதாக கூறியுள்ளான். இதனால் சந்தேகம் அடைந்த பக்கத்து வீட்டு பெண், மற்ற பெண்களுடன் சேர்ந்து ஜன்னல் வழியாக எட்டி பார்த்துள்ளார். அப்போது அந்த பெண்ணுக்கு குழந்தை பிறந்திருந்தது தெரியவந்தது. அவர் மயங்கிய நிலையில் கிடப்பதை கண்டும், அவருக்கு அருகில் கணவர் நிற்பதை பார்த்து பக்கத்து வீட்டு பெண்கள் அதிா்ச்சி அடைந்தனர்.

உடனே வீட்டுக்குள் நுழைந்த பெண்கள், அந்த பெண்ணையும், ரத்த வெள்ளத்தில் கிடந்த பச்சிளம் பெண் குழந்தையையும் மீட்டுள்ளனர். இதுபற்றி உடனடியாக அரசு அதிகாரிகளுக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகளும், போலீசாரும், அந்த பெண்ணையும், குழந்தையையும் மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு குழந்தையை பரிசோதித்த போது, அது ஏற்கனவே இறந்திருந்தது டாக்டர்களுக்கு தெரியவந்தது. அதைத்தொடர்ந்து, அந்த பெண்ணுக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்தனர்.

அதே நேரத்தில் கர்ப்பமாகி இருப்பதை மறைத்தும், வீட்டில் வைத்தே பிரசவம் பார்த்ததால் தான் குழந்தை இறந்து விட்டதாகவும் கிராம மக்கள் கூறினார்கள். அத்துடன் ஆஸ்பத்திரிக்குள் புகுந்து அந்த பெண் மீது கிராம மக்கள் ஆத்திரத்தில் தாக்குதல் நடத்தவும் முயன்றனர். இதனால் அங்கு பரபரப்பு உண்டானது. பின்னர் அந்த பெண்ணிடம் வீட்டில் வைத்து பிரசவம் பார்த்தது ஏன்? என்று போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது நெஞ்சை உருக்கும் பரபரப்பு தகவல் வெளியானது.

அதாவது பீகார் மாநிலத்தை சேர்ந்த அந்த தம்பதி பல ஆண்டுகளாக துமகூருவில் வசிக்கின்றனர். அந்த தம்பதி எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டு இருந்துள்ளனர். இதுபற்றி அவர்களுக்கு தெரிந்துள்ளது. இதற்கிடையில், அந்த பெண் கர்ப்பம் அடைந்ததால், தனக்கு பிறக்க போகும் குழந்தைக்கும் எச்.ஐ.வி. பாதிப்பு ஏற்படும் என்று கருதியுள்ளனர். மேலும் அந்த பெண் கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் ஆஸ்பத்திரிக்கு சென்று பரிசோதித்தால், ரத்த பரிசோதனை செய்யப்படும். அப்போது தனக்கு எச்.ஐ.வி. பாதிப்பு இருப்பதை டாக்டர்கள் கண்டுபிடித்து விடுவார்கள். இதுபற்றி அனைவருக்கும் தெரிந்து விட்டால் தங்களுக்கு இருக்கும் 2 குழந்தைகளின் எதிர்காலமும் பாதிக்கப்படும் என்று நினைத்துள்ளனர்.

இதனால் அந்த பெண் கர்ப்பமாக இருப்பதை மறைத்து வீட்டிலேயே பிரசவம் பார்க்கும்படி கணவரிடம் கூறியுள்ளார். அவ்வாறு வீட்டில் பிரசவம் பார்த்து பிறக்கும் குழந்தை இறந்தாலும், தங்களது மற்ற 2 குழந்தைகளையும் நல்லபடியாக வளர்க்க தம்பதி திட்டமிட்டது தெரியவந்துள்ளது. இதை கேட்டு போலீசாரும், கிராம மக்களும் அதிர்ச்சியும் சோகமும் அடைந்தனர். தற்போது அந்த பெண்ணுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Next Story