‘உள்ளாட்சி பிரதிநிதிகள் கட்சி பாகுபாடின்றி பணியாற்ற வேண்டும்’ - அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேச்சு
உள்ளாட்சி பிரதிநிதிகள் கட்சி பாகுபாடின்றி பணியாற்ற வேண்டும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார்.
வத்திராயிருப்பு,
வத்திராயிருப்பு யூனியனில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் சிந்துமுருகன், துணைத்தலைவர் ரேகா, கவுன்சிலர்கள் மற்றும் ஊராட்சி தலைவர்களை அறிமுகப்படுத்தும் விழா யூனியன் அலுவலகத்தில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தலைமையில் நடைபெற்றது. ஸ்ரீவில்லிபுத்தூர் சந்திரபிரபா எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். யூனியன் தலைவர் சிந்துமுருகன் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில், அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறியதாவது:-
உள்ளாட்சி அமைப்புகள் ஜாதி, மத பேதமில்லாமல் எல்லோரையும் ஒருங்கிணைக்க கூடிய அமைப்பாகும். அனைத்து கட்சிகளை சேர்ந்த உள்ளாட்சி பிரதிநிதிகள் கட்சி பாகுபாடு இல்லாமல் ஒரே குடும்பமாக ஒற்றுமையாக செயல்படும்போது பல்வேறு வளர்ச்சிப் பணிகள் நடைபெறுவதற்கு வாய்ப்பாக அமையும். இந்த யூனியன் தலைவர் திறமைசாலி. இந்த ஒன்றியத்தை எவ்வாறு வளர்ச்சிப்பாதைக்கு கொண்டு செல்லலாம் என்று அவருக்கு தெரியும். தற்போது ஊரக வளர்ச்சித் துறைக்கு ரூ.6,500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
வத்திராயிருப்பு பகுதிக்கு பிளவக்கல் அணையில் இருந்து குடிநீர் திட்டத்தை செயல்படுத்தலாம் என்றால் விவசாயிகள் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதால் திட்டத்தை செயல்படுத்த முடியாது என அதிகாரிகள் கூறுகின்றனர். எம்.எல்.ஏ.யும், வத்திராயிருப்பு யூனியன் தலைவரும், துணைத்தலைவரும் எதிர்ப்பு தெரிவிக்கும் விவசாயிகளிடம் இந்த திட்டத்தின் பயன்களை எடுத்துக்கூறி முடிவு செய்தால் மட்டுமே பிளவக்கல் குடிநீர் திட்டத்தை செயல்படுத்த முடியும். இவ்வாறு பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன், முன்னாள் எம்.எல்.ஏ. பொன்னுபாண்டியன், மாவட்ட ஊராட்சி தலைவர் வசந்திமான்ராஜ், திட்ட ஆணையாளர் ராஜசேகர், ஸ்ரீவில்லிபுத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளர் முத்தையா, வத்திராயிருப்பு ஒன்றிய செயலாளர்கள் சுப்புராஜ், சேதுராமலிங்கம், மாவட்ட கவுன்சிலர்கள் கணேசன், மகாலட்சுமி மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story