அறுவடை எந்திரம் தட்டுப்பாடு - விவசாயிகள் தவிப்பு


அறுவடை எந்திரம் தட்டுப்பாடு - விவசாயிகள் தவிப்பு
x
தினத்தந்தி 9 Feb 2020 10:00 PM GMT (Updated: 9 Feb 2020 11:19 PM GMT)

எஸ்.புதூர் ஒன்றியத்தில் அறுவடை எந்திரம் தட்டுப்பாடு நிலவி வருவதால் அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

எஸ்.புதூர், 

எஸ்.புதூர் ஒன்றியத்தில் 80-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இப்பகுதிகளில் விவசாயமே பிரதான தொழிலாக இருந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக பருவ மழை பொய்த்ததால் விவசாயம் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த ஆண்டு தேவையான அளவு மழை பெய்ததை தொடர்ந்து விவசாயிகள் நெல் பயிரிட்டுள்ளனர். எஸ்.புதூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பல ஏக்கரில் நெல் விவசாயம் செய்யப்பட்டுள்ளது. இப்பகுதியில் விவசாய பணிகளுக்கு ஆட்கள் பற்றாக்குறை உள்ளதாக விவசாயிகள் கூறி வருகின்றனர். ஆனாலும் விதைப்பு மற்றும் நடவு பணி கடந்த புரட்டாசி, ஐப்பசி மாதங்களில் நடைபெற்றது.

இந்த நிலையில் நெற்பயிர் விளைந்து அறுவடைக்கு தயாரான நிலையில் உள்ளது. ஆனால் அறுவடைக்கு ஆட்கள் பற்றாக்குறை காரணமாக விவசாயிகள் அறுவடை எந்திரத்தை எதிர்பார்த்து உள்ளனர். ஆனால் இப்பகுதியில் அறுவடை எந்திரங்களும் தட்டுப்பாடாக உள்ளதால் ஒரு சில இடங்களில் வெளியூர்களில் இருந்து அறுவடை எந்திரங்கள் வரவழைக்கப்பட்டு பணி நடைபெற்று வருகின்றது.

அதிலும் கடந்த ஆண்டு ஒரு மணி நேரத்திற்கு எந்திர வாடகையாக ரூ.1,500 வரை வாங்கி வந்த நிலையில், இந்த ஆண்டு ரூ.2 ஆயிரம் முதல் ரூ.2,300 வரை வாடகை வாங்கி வருவதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர். மேலும் அறுவடைக்கு எந்திரங்கள் பற்றாக்குறை காரணமாக நெற்கதிர்கள் விளைந்து நிலத்திலேயே சாய்கிறது. இதனால் விவசாயிகள் செய்வதறியாது தவித்து வருகின்றனர். 

Next Story