மத்திய பட்ஜெட்டில், தமிழக ரெயில்வே திட்டங்களுக்கு ரூ.10 ஆயிரம் மட்டுமே ஒதுக்கீடு - மதுரை எம்.பி. குற்றச்சாட்டு
மத்திய பட்ஜெட்டில் தமிழகத்தின் ரெயில்வே திட்டங்களுக்கு ரூ.10 ஆயிரம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக மதுரை எம்.பி. வெங்கடேசன் கூறினார். இதுகுறித்து மதுரையில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது-
மதுரை,
கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ரெயில்வே பட்ஜெட்டில் தமிழகத்தின் புதிய திட்டங்களின் மதிப்பு ரூ.12 ஆயிரம் கோடி. அந்த திட்டங்களுக்கு இந்த பட்ஜெட்டில் வெறும் ரூ.10 ஆயிரம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இது அநீதியின் உச்சம். தமிழக மக்களின் அன்புக்கு அவர் அளித்துள்ள பரிசு இதுதான். ஆனால் உத்தரபிரதேசத்தை மையமாக வைத்து செயல்படும் வடக்கு ரெயில்வேயில் புதிய திட்டங்கள் செயல்படுத்த ஒதுக்கப்பட்டுள்ள தொகை ரூ. 7ஆயிரம் கோடி.
இந்தியாவிலேயே ஜி.எஸ்.டி. அதிகம் செலுத்தும் மாநிலங்களில், முதல்நிலை பட்டியலில் தமிழகம் உள்ளது. அப்படி இருக்கும்போது, ரெயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்காதது தமிழக மக்களை வஞ்சிக்கும் செயலாகும். எனவே, முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரெயில்வே தொடர்பான கோரிக்கைகளில் தலையிட்டு கூடுதல் நிதி பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோல், தமிழக மக்களும் ஓரணியில் திரண்டு கோரிக்கைகளை வலியுறுத்த வேண்டும். மத்திய அரசின் துரோகத்திற்கு எதிராக போராட வேண்டும்.
எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகள் ஜப்பான் நாட்டின் ஜெய்கா நிறுவனத்தின் நிதியுதவியுடன் தொடங்கப்பட்டு பணிகள் திட்டமிட்டபடி நடைபெற்று வருகின்றன. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 2023-ம் ஆண்டு தொடங்கப்பட வேண்டும். அதற்கான மருத்துவ மாணவர் சேர்க்கையை இந்த ஆண்டே தொடங்கியிருக்க வேண்டும். ஆனால் தொடங்கவில்லை.
எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கையை தொடங்குவதற்கு தற்காலிகமாக தனி கட்டிடம், 300 படுக்கைகள் கொண்ட ஒரு இணைப்பு மருத்துவமனை தேவை. அதற்கான வாய்ப்புகள் மதுரையில் அதிகம் உள்ளது. தேவைப்பட்டால் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஒரு பிரிவைக் கூட இதற்காக ஒதுக்கலாம். முதல்- அமைச்சரும் சுகாதாரத் துறை அமைச்சரும் உடனடியாக தலையிட்டு எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஒரு தனி அதிகாரியை நியமித்து அடுத்த ஆண்டாவது மருத்துவ மாணவ சேர்க்கையை தொடங்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் ராமகிருஷ்ணன், மாநகர் மாவட்ட செயலாளர் இரா.விஜயராஜன் உள்ளிட்ட பலர் இருந்தனர்.
Related Tags :
Next Story