இட ஒதுக்கீடு அடிப்படை உரிமை இல்லை என்ற சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு மல்லிகார்ஜுன கார்கே கண்டனம்


இட ஒதுக்கீடு அடிப்படை உரிமை இல்லை என்ற சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு மல்லிகார்ஜுன கார்கே கண்டனம்
x
தினத்தந்தி 10 Feb 2020 5:17 AM IST (Updated: 10 Feb 2020 5:17 AM IST)
t-max-icont-min-icon

இட ஒதுக்கீடு அடிப்படை உரிமை இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ள தீர்ப்புக்கு மல்லிகார்ஜுன கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் இந்த விஷயத்தில் மத்திய அரசு உடனடியாக தலையிட வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

பெங்களூரு,

சுப்ரீம் கோர்ட்டு, இட ஒதுக்கீடு அடிப்படை உரிமை இல்லை என்று தீர்ப்பு கூறியது. இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

இட ஒதுக்கீடு தொடர்பாக அரசியல் சாசனத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இதை தெரிந்திருந்தும், சுப்ரீம் கோர்ட்டு இட ஒதுக்கீடு அடிப்படை உரிமை இல்லை என்று தீர்ப்பு கூறியிருப்பது ஆச்சரியம் அளிப்பதாக உள்ளது. இது நாட்டை தவறான பாதைக்கு அழைத்து செல்வதாக உள்ளது. தனிப்பட்ட முறையில் இந்த தீர்ப்பை நான் கண்டிக்கிறேன்.

நாட்டில் ஆதிதிராவிடர் களின் உரிமைகளை முடக்க முயற்சி நடக்கிறது. பா.ஜனதாவினர் இருக்கும் இடங்களில் இத்தகைய முயற்சிகள் நடந்து கொண்டே தான் இருக்கின்றன. இது துரதிர்ஷ்டம். பா.ஜனதா தலைவர்கள் ஒவ்வொருவரும், ஒவ்வொரு கருத்தை கூறி குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறார்கள்.

அரசியல் சாசனத்தை மாற்றவும், இட ஒதுக்கீட்டை ரத்து செய்யவும் பா.ஜனதா தொடக்கம் முதலே முயற்சி செய்து வருகிறது. பா.ஜனதா ஆளும் மாநிலங்களில் ஆதிதிராவிடர்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள். இட ஒதுக்கீடு அடிப்படை உரிமை இல்லை என்று சொன்னால், அந்த மக்கள் எங்கு செல்ல வேண்டும்?. 70 ஆண்டுகளாக பின்பற்றப்படும் சமூகநீதியை குழிதோண்டி புதைக்க முயற்சி செய்வது சரியல்ல.

இட ஒதுக்கீட்டை ரத்து செய்தால், நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் காங்கிரஸ் தீவிரமாக போராடும். சுப்ரீம் கோர்ட்டில் இத்தகைய தீர்ப்பு வர உத்தரகாண்டில் உள்ள பா.ஜனதா அரசே காரணம்.

இப்போது உத்தரபிரதேசமும் இந்த தீர்ப்பை அமல் படுத்த திட்டமிட்டுள்ளது. இது உண்மையிலேயே மிக ஆபத்தான போக்கு. மத்திய அரசு உடனே இந்த விஷயத்தில் தலையிட்டு சுப்ரீம் கோர்ட்டுக்கு தெளிவுபடுத்த வேண்டும். இவ்வாறு மல்லிகார்ஜுன கார்கே கூறினார்.

Next Story