ஈரோட்டில் பரபரப்பு, டிரான்ஸ்பார்மர் அருகில் பற்றி எரிந்த தீ - வீடுகளில் இருந்து வெளியேறிய பொதுமக்கள்
ஈரோட்டில் டிரான்ஸ்பார்மர் அருகில் பற்றி எரிந்த தீயால் பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியேறினார்கள்.
ஈரோடு,
ஈரோடு கொல்லம்பாளையம் நுழைவு பாலம் அருகில் ரெயில்வே ஊழியர்களுக்கான குடியிருப்பு பகுதிகள் உள்ளன. அங்கு காலி இடத்தில் செடி, கொடிகள் வளர்ந்து காணப்பட்டது. கடந்த சில நாட்களாக அடித்த வெயிலின் காரணமாக புல், செடிகள் காய்ந்து கிடந்தன.
இந்தநிலையில் நேற்று மதியம் 2 மணி அளவில் அந்த பகுதியில் திடீரென தீப்பற்றியது. புல் காய்ந்து கிடந்ததால் தீ மளமளவென பரவியது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். குடியிருப்பு பகுதிகளுக்குள் தீ பரவும் அபாயம் ஏற்பட்டது. மேலும், அங்குள்ள டிரான்ஸ்பார்மரை சூழ்ந்தபடி தீப்பற்றி எரிந்தது. இதனால் வீடுகளில் இருந்து பொதுமக்கள் வெளியேறினார்கள்.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் ஈரோடு தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள், அங்கு பற்றி எரிந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் அரை மணிநேரத்தில் தீ முழுமையாக அணைக்கப்பட்டது. தீ விபத்து ஏற்பட்ட காலி இடத்துக்கு அருகில் கரூர ்ரோடு செல்கிறது. இதனால் தீ அணைக்கும் வரை சிறிதுநேரம் அந்த பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு இருந்தது. இந்த தீ விபத்து காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story