தொலைநோக்கு திட்டங்களுக்கு அ.தி.மு.க. அரசு செயல் வடிவம் கொடுத்து வருகிறது - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேச்சு
தொலைநோக்கு திட்டங்களுக்கு அ.தி.மு.க. அரசு செயல்வடிவம் கொடுத்து வருகிறது என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசினார்.
வாடிப்பட்டி,
வாடிப்பட்டி பேரூராட்சியில் மதுரை- திண்டுக்கல் 4 வழிச்சாலையில் இருந்து கைவிடப்பட்ட நகர்ப்புற வழிச்சாலை 6 கி.மீ. தூரத்தில் மின்வாரிய அலுவலக பிரிவில் இருந்து வாடிப்பட்டி பஸ்நிலையம் வழியாக சாணாம்பட்டி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கு வரை ரூ.9 கோடிமதிப்பீட்டில் சீரமைக்கப்படுகிறது. அதற்கான பூமிபூஜை நடந்தது.
நிகழ்ச்சிக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். மாணிக்கம் எம்.எல்.ஏ., பேரூராட்சி உதவிஇயக்குனர் சேதுராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயல் அலுவலர் சிவக்குமார் வரவேற்றார்.
தாதம்பட்டி மந்தையில் மூலதன மானிய திட்டத்தில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் ஒட்டான்குளம், நடையாளர் பூங்கா, சல்லக்குளத்தில் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுநிதியில் கட்டப்பட்டுள்ள சமுதாயக்கூடம், தூய்மை இந்தியா திட்டத்தில் தலா ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் தாதம்பட்டி நீரேத்தான் போடி நாயக்கன்பட்டி, குலசேகரன் கோட்டை, பெருமாள்பட்டி, மயானங்களில் உள்ள நவீன சுகாதார வளாகங்களை திறந்துவைத்தார்.
மேலும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் குப்பைகள் அள்ளுவதற்கு 2 பேட்டரி வாகனத்தையும் தொடங்கி வைத்தார். அனைவருக்கும் வீடுகள் திட்ட பயனாளிகள் 48 பேருக்கு பணி ஆணைகளை வழங்கி அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:- வாடிப்பட்டியில் இந்த பகுதிக்கு முதல்முதலாக வந்தபோது இந்த குளம் முழுவதும் சீமைக்கருவேல முட்கள் முளைத்து புதராகவும், குப்பைகள் கொட்டும் இடமாகவும் இருந்தது. மாணிக்கம் எம்.எல்.ஏ. முயற்சியால் தற்போது குளம் முழுவதும் சீரமைத்து நடையாளர் பூங்காவாக மாற்றப்பட்டு உள்ளது. விரைவில் குளத்தில் தண்ணீர் நிரப்பப்பட்டு படகு விடுவதற்கும் ஏற்பாடு செய்து வருகிறார். மேலும் சோழவந்தான் தொகுதியைதன்னிறைவு தொகுதியாக மாற்ற சாலை, குடிநீர், மின்விளக்கு, சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்ய பாடுபட்டு வருகிறார்.
மக்களுக்காக நான், மக்களால் நான் என்ற ஜெயலலிதாவின் எண்ணப்படி முதல்-அமைச்சரும், துணைமுதல்-அமைச்சரும் உலகநாடுகளே வியக்கும் அளவில் சாதனைகளை செய்து வருகின்றனர். தொலைநோக்கு பார்வையில் திட்டங்களை உருவாக்கி அ.தி.மு.க. அரசு செயல்வடிவம்கொடுத்து வருகிறது. உங்கள் ஆதரவு தொடர்ந்து எங்களுக்கு கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார். இதில் ஒன்றிய செயலாளர் செல்லப்பாண்டி, மாவட்ட மாணவரணி துணைத்தலைவர் வக்கீல் கார்த்திக், முன்னாள் பேரூராட்சி துணைத்தலைவர் சோனை, கூட்டுறவுசங்க தலைவர்கள் ராஜேஷ் கண்ணா, துரைநடராஜன், காளிதாஸ், உங்குசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் பேரூர்செயலாளர் பாப்புரெட்டி நன்றி கூறினார். முன்னதாக பஸ்நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த மன்னர் திருமலைநாயக்கர் உருவப்படத்திற்கு அமைச்சர் உதய குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
Related Tags :
Next Story