கோத்தகிரி மார்க்கெட்டுக்குள் 2 காட்டெருமைகள் புகுந்தன - பொதுமக்களை விரட்டியதால் பரபரப்பு
கோத்தகிரி மார்க்கெட்டுக்குள் புகுந்த 2 காட்டெருமைகள் பொதுமக்களை விரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோத்தகிரி,
கோத்தகிரி நகரின் மையப்பகுதியில் கோத்தகிரி பேரூராட்சிக்கு சொந்தமான மார்க்கெட் அமைந்துள்ளது. இங்கு சுமார் 400-க்கும் மேற்பட்ட கடைகள் அமைந்துள்ளன. வாரத்தில் ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் மார்க்கெட்டிற்கு அத்தியாவசிய பொருட்களை வாங்க வரும் பொதுமக்களின் கூட்டம் அதிகரித்து காணப்படுவது வழக்கம்.
இந்தநிலையில் நேற்று மதியம் சுமார் 1 மணியளவில் 2 காட்டெருமைகள் மார்க்கெட்டின் முக்கிய நுழைவு வாயில் வழியாக புகுந்ததோடு, சர்வசாதாரணமாக மார்க்கெட்டிற்குள் உலா வந்தன. காட்டெருமைகள் உலா வருவதை பார்த்தவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
இதனை தொடர்ந்து சில வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் காட்டெருமைகளை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது அந்த காட்டெருமைகள் அவர்களை நோக்கி வேகமாக ஓடிவந்தது. இதனால் அவர்கள் செய்வதறியாமல் திகைத்ததோடு அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். சிறிது நேரத்தில் அந்த காட்டெருமைகள் மார்க்கெட்டிற்குள் உள்ள நடைபாதை வழியாக சென்று மற்றொரு நுழைவு வாயில் வழியாக வெளியேறின. பின்னர் அங்குள்ள சாலை வழியாக காட்டெருமைகள் நடந்து சென்று காவலர் குடியிருப்பு பகுதியில் உள்ள புதர்பகுதிக்குள் சென்றுவிட்டன.
மார்க்கெட் பகுதியில் 2 காட்டெருமைகள் புகுந்ததால் ½ மணி நேரம் பரபரப்பு நிலவியது.
Related Tags :
Next Story