உங்கள் கனவை லட்சிய கனவாக மாற்றி வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும்; பள்ளி கல்வித்துறை இயக்குனர் அறிவுரை
அப்துல்கலாம் கூறியது போன்று உங்கள் கனவை லட்சிய கனவாக மாற்றி வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் கூறினார்.
பனப்பாக்கம்,
பாணாவரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 1980-85-ம் ஆண்டு வரை படித்த முன்னாள் மாணவர்கள் சார்பில் அப்பள்ளியில் பணியாற்றி மறைந்த உடற்கல்வி ஆசிரியர் சுந்தரம் நினைவாக நினைவு மேடை அரங்கம் அமைக்கப்பட்டது. அதன் திறப்பு விழா மற்றும் முன்னாள் மாணவர் சங்க தொடக்க விழா ஆகியவை நடைபெற்றன. விழாவிற்கு முன்னாள் மாணவர்கள் தலைமை தாங்கினர்.
இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழக பள்ளி கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் கலந்துகொண்டு நினைவு மேடை அரங்கத்தை திறந்து வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-
உடற்கல்வியையும், நல்ல ஒழுக்கத்தையும் மாணவர்களுக்கு கற்றுக்கொடுத்தவர் மறைந்த உடற்கல்வி ஆசிரியர் சுந்தரம். அவரது நினைவாக இந்த பள்ளியில் ஒரு நினைவு அரங்கத்தை முன்னாள் மாணவர்கள் கட்டி உள்ளனர். அதனை திறந்து வைப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
மறைந்த உடற்கல்வி ஆசிரியரை குருவாக நினைத்து படித்த முன்னாள் மாணவர்கள் பலர் இன்று நல்ல வேலை மற்றும் உயர் பதவிகளில் உள்ளனர். இதுபோன்ற ஆசிரியர்களால் தான் நம்முடைய சமுதாயம் மேம்படும். அப்துல்காலம் மாணவர்களை கனவு காணுங்கள் என்று கூறினார். அப்துல்கலாம் கூறியது போன்று உங்கள் கனவை லட்சிய கனவாக மாற்றி வாழ்க்கையில் நீங்கள் வெற்றி பெற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில், பொருளாதார குற்றவியல் போலீஸ் சூப்பிரண்டு தில்லை நடராஜன், அரக்கோணம் மாவட்ட கல்வி அலுவலர் முத்தமிழ்செல்வம் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், ஊர்பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளி தலைமையாசிரியர் (பொறுப்பு) கோபி நன்றி கூறினார்.
Related Tags :
Next Story