மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: நெல்லை கலெக்டர் அலுவலகத்தை துப்புரவு பணியாளர்கள் முற்றுகை சம்பளத்தை உயர்த்தி வழங்க கோரிக்கை


மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: நெல்லை கலெக்டர் அலுவலகத்தை துப்புரவு பணியாளர்கள் முற்றுகை சம்பளத்தை உயர்த்தி வழங்க கோரிக்கை
x
தினத்தந்தி 10 Feb 2020 11:00 PM GMT (Updated: 10 Feb 2020 4:55 PM GMT)

சம்பளத்தை உயர்த்தி வழங்க கோரி நெல்லை கலெக்டர் அலுவலகத்தை துப்புரவு பணியாளர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.

நெல்லை,

நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் ஷில்பா தலைமை தாங்கி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை வாங்கினார்.

தமிழ்நாடு வாடகை வாகன உரிமையாளர்கள், ஓட்டுனர் முன்னேற்ற சங்க மாநில தலைவர் சந்தோஷம் தலைமையில் டிரைவர்கள் நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். அவர்கள் நுழைவு வாயில் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தினர். பின்னர் சங்க நிர்வாகிகள், கலெக்டரை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர்.

அந்த மனுவில், “வாடகை வாகனங்களில் வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்தி வாகன தகுதி சான்றிதழ் பெற்று வந்தோம். ஆனால் தற்போது வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் வேறு வாகன கட்டுப்பாட்டு கருவி பொருத்தி ஆன்லைன் மூலம் சான்றிதழ் பெற வேண்டும் என்று கூறுகிறார்கள். இதை எதிர்த்து மதுரை ஐகோர்ட்டு கிளையில் வழக்கு தொடரப்பட்டது. வேகக் கட்டுப்பாட்டு கருவி பொருத்த இடைக்கால தடை விதிக்கப்பட உள்ளது. எனவே வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்தாமல் வாகன உரிமம் சான்றிதழ் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறப்பட்டு உள்ளது.

மக்கள் தேசம் கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் சுகுமார், நிர்வாகிகள் மதிவாணன், நீலகண்டன் உள்ளிட்டோர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

அந்த மனுவில், “கல்லிடைக்குறிச்சி பஸ் நிறுத்தம் அருகே உள்ள மெயின் ரோட்டில் அரசின் டாஸ்மாக் கடை அமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் அருகில் தபால் நிலையம், பத்திர பதிவுத்துறை அலுவலகம், மின்வாரிய அலுவலகம் உள்ளன. மேலும் அந்த பகுதியில் அரசு பள்ளிக்கூடங்கள் இருக்கின்றன. மேற்படி இடத்தில் டாஸ்மாக் கடை அமைந்தால், பள்ளி மாணவ-மாணவிகள் பாதிக்கப்படுவார்கள். எனவே அந்த பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்க கூடாது“ என்று கூறப்பட்டு இருந்தது.

நெல்லை சந்திப்பு உடையார்பட்டியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகையிட்டனர். பின்னர் பொதுமக்கள் சார்பில் கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது. அந்த மனுவில், “எங்கள் ஊரில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடம் உள்ளது. அந்த இடத்தை ஒரு சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். அந்த இடத்தை மீட்டு தர வேண்டும்“ என்று கூறப்பட்டு உள்ளது.

பா.ஜனதா கட்சியின் விவசாய அணி பொதுச்செயலாளர் கணேஷ்குமார் ஆதித்தன், வக்கீல் பிரிவு மாநில செயலாளர் பாலாஜி கிருஷ்ணசாமி, இளைஞர் அணி மாநில செயலாளர் வேல் ஆறுமுகம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

பின்னர் பா.ஜனதா நிர்வாகிகள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், “வீரவநல்லூர் கிளாக்குளம் பகுதியில் டாஸ்மாக் கடைக்கு எதிராக போராட்டம் நடந்தது. அப்போது அங்கு பா.ஜனதா கட்சியின் இளைஞர் அணி பொதுச்செயலாளர் தடிக்காரன் நின்று கொண்டு இருந்தார். அவரை போலீசார் சரமாரியாக தாக்கி வழக்குப்பதிவு செய்துள்ளனர். அத்து மீறி செயல்பட்ட போலீஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறப்பட்டு உள்ளது.

நெல்லை மாவட்ட ஊரக உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்க தலைவர் மோகன் தலைமையில் துப்புரவு தொழிலாளர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அவர்கள், கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அதில் தினக்கூலி தொழிலாளர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் சம்பளம் உயர்த்தி வழங்கப்படும். ஆனால் இந்த ஆண்டு சம்பள உயர்வு வழங்கப்படவில்லை. நெல்லை மாநகராட்சியில் 750-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் துப்புரவு பணி செய்து வருகிறார்கள். அவர்களுக்கு தினசரி ரூ.359 சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு ரூ.634 சம்பளம் வழங்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

நெல்லை மாவட்ட மெல்லிசை கலைஞர்கள் சங்கத்தினர் கொடுத்த மனுவில் நெல்லை மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளாக இரவு 10 மணிக்கு மேல் கலை நிகழ்ச்சிகள் நடத்த போலீசார் தடை விதித்துள்ளனர். இதனால் எந்த நிகழ்ச்சியும் நடைபெறுவது இல்லை. இதனால் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த 6 ஆயிரம் கலைஞர்கள் தொழில் பாதிக்கப்படுகிறது. எங்களுக்கு இரவு நேரங்களில் கலை நிகழ்ச்சிகள் நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது..

நெல்லை பேட்டை உடையார் தெருவை சேர்ந்த தியாகராஜன் தலைமையில் கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது. அந்த மனுவில், “பேட்டை சேரன்மாதேவி ரோட்டில் கொம்புமாடசாமி கோவில் உள்ளது. இந்த கோவில் நிர்வாகத்தை நாங்கள் தொடர்ந்து நடத்தி வருகிறோம். அதே இடத்தில் புதிய கோவிலை கட்டி கும்பாபிஷேகம் செய்தோம். ஆனால் ஒரு சிலர் கொம்புமாடசாமி கோவில் பூட்டை உடைத்து விட்டு, உள்ளே சென்றுள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கோர்ட்டு உத்தரவுப்படி நிர்வாகத்தை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும்“ என்று கூறப்பட்டு இருந்தது.

பாளையங்கோட்டையை சேர்ந்த ராஜகோபாலன் பஜனை குழுவை சேர்ந்த கண்ணன் தலைமையில் கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது. “பாளையங்கோட்டை ராஜகோபால சுவாமி கோவில் தேரை திருப்பணி செய்ய விண்ணப்பித்து இருந்தோம். அதற்கு அரசு அனுமதி அளித்தது. ஆனால் சில இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் அரசாணையை தராமல் மிரட்டி வருகிறார்கள். தேர் திருப்பணியை எங்கள் பஜனை குழு செய்வதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

கூடங்குளம் மேலபஜாரை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில், எங்கள் ஊர் அருகில் அனுமதி பெறாமல் கல்குவாரி நடத்தப்பட்டு வருகிறது. இரவு நேரங்களில் வெடி வைப்பதால், வீடுகளில் இடிந்து விழும் நிலை ஏற்படுகிறது. தாங்கள் எங்கள் ஊரில் ஆய்வு செய்து அனுமதி இல்லாமல் நடத்தும் கல்குவாரிகளை நிரந்தரமாக மூட வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

நெல்லை அருகே உள்ள சீதபற்பநல்லூரை அடுத்த வெள்ளாளங்குளத்தை சேர்ந்த சுப்பிரமணியன் மனைவி பூமா (வயது 37). மாற்றுத்திறனாளியான இவர், கலெக்டரிடம் ஒரு மனு கொடுத்தார்.

அந்த மனுவில், “நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெறுவதற்காக விண்ணப்பித்து இருந்தேன்.

எனக்கு தபால் மூலம் ஒரு கடிதம் அனுப்பப்பட்டு இருந்தது. அதில், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகைக்கு பதிலாக கணவர் இறந்து விட்டால் அதற்கான ஆவணங்களை சமர்ப்பித்து விதவை சான்றிதழ் பெற்றுக்கொள்ளுங்கள் என குறிப்பிடப்பட்டு இருந்தது. இதனால் எனக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. இந்த கடிதம் அனுப்பிய துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறப்பட்டு இருந்தது.

Next Story