ராஜபாளையம் அருகே, ஒரு தலைக் காதலால் என்ஜினீயர் தீக்குளிப்பு
ராஜபாளையம் அருகே ஒரு தலை காதலால் தீக்குளித்த டிப்ளமோ என்ஜினீயருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ராஜபாளையம்,
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே சேத்தூர் பஸ் நிலைய பகுதியில் நேற்று காலை வழக்கம்போல பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்பட்டது. அப்போது வாலிபர் ஒருவர் திடீரென்று தன் உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். தீ மளமளவென உடலில் பற்றி எரிந்தது.
இதனைப் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து சாக்குப்பையை கொண்டு வாலிபரின் உடலில் பற்றிய தீயை அணைத்து அவரை ராஜபாளையம் அரசு பொது மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து நடத்திய விசாரணையில் அந்த வாலிபர் அருகில் உள்ள சொக்கநாதன்புத்தூர் கிராமத்தை சேர்ந்த நடராஜன் என்பவரது மகன் அருண் (வயது 26) என்பது தெரிய வந்தது. டிப்ளமோ என்ஜினீயரான இவர் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார்.
அவர் கல்லூரி மாணவியை ஒரு தலையாக காதலித்து வந்ததாகவும் தெரிகிறது. நேற்று கல்லூரிக்கு செல்ல வந்த அந்த மாணவியை அருண் பின்தொடர்ந்து வந்து தனது காதலை ஏற்றுக்கொள்ள வற்புறுத்தியுள்ளார்.
ஆனால் அந்த மாணவி பதில் ஏதும் கூறாமல் கல்லூரி பஸ்சில் ஏறியுள்ளார். இதையடுத்து அருண் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடத்தில் வாலிபர் தீக்குளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story