கூடலூரில், ஆறுகள் வறண்டதால் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்


கூடலூரில், ஆறுகள் வறண்டதால் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்
x
தினத்தந்தி 11 Feb 2020 3:45 AM IST (Updated: 10 Feb 2020 10:46 PM IST)
t-max-icont-min-icon

கூடலூரில் ஆறுகள் வறண்டதால், குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

கூடலூர்,

கூடலூரில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை என ஆண்டுதோறும் ஜூன் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை 6 மாதங்கள் தொடர் மழை பெய்வது வழக்கம். தென்னிந்தியாவின் 2-வது சிரபுஞ்சி, ஆக்சிஜன் வங்கி, தென்னகத்தின் நீர்த்தொட்டி என பல்வேறு பெருமைகளை கூடலூர் கொண்டு உள்ளது. மழை பெய்வதற்கு ஏற்ப பணப்பயிர்களும் விளைகிறது. ஏராளமான கிளை ஆறுகள் உற்பத்தியாகி பாண்டியாறு, பொன்னானி, மாயார் வழியாக கேரளா, தமிழகத்துக்கு தண்ணீர் பாய்கிறது. இதேபோல் பந்தலூர் பகுதியில் பெய்யும் மழைநீர் கேரளா வழியாக கர்நாடகாவின் கபினி அணைக்கு பாய்கிறது.

கனமழை பெய்யும் பகுதியாக கூடலூர் இருந்தாலும் கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவது வழக்கமாகி விட்டது. கூடலூர் நகர மக்களின் தாகத்தை தணிக்க ஓவேலி பகுதியில் ஆத்தூர், பல்மாடி உள்பட பல தடுப்பணைகளும், பாண்டியாற்றில் தொடங்கப்பட்ட குடிநீர் திட்டமும் கை கொடுத்து வருகிறது.

மழைக்காலத்தில் தடுப்பணைகளில் தண்ணீர் வரத்து அதிகமாக இருக்கும். ஆனால் மழை நின்று கோடை காலம் தொடங்கி விட்டால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட தொடங்கி விடுகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கூடலூர் பகுதியில் தொடர் கனமழை பெய்து ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டு முக்கிய சாலைகள் துண்டித்தன. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு பாதித்தது.

இந்த நிலையில் தற்போது கோடை மற்றும் பனிக்காலமாக உள்ளது. பகலில் நன்கு வெயிலும், இரவில் பனிப்பொழிவும் காணப்படுகிறது. இதன் காரணமாக கூடலூர் பகுதியில் ஓவேலி ஆறுகள், பாண்டியாறு, மாயார் ஆறுகளில் தண்ணீர் வரத்து அடியோடு குறைந்து விட்டது. பல ஆறுகள் வறண்டு காணப்படுகிறது. இதனால் தடுப்பணைகளிலும் தண்ணீர் குறைந்து வருகிறது. மேலும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயமும் உள்ளது. இதனால் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி நிர்வாக அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

கடந்த ஜூன் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை மழை பெய்து வந்ததால் கூடலூர் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படவில்லை. தற்போது கோடை காலம் தொடங்கி விட்டது. நீர்நிலைகளில் தண்ணீர் குறைந்து வருகிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டமும் குறைந்து, குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே தட்டுப்பாட்டை சமாளிக்க நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பகுதியில் அரசுக்கு சொந்தமான கிணறுகளை முறையாக தூர்வாருவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மேலும் குழாய் மூலம் குடிநீர் வினியோகத்தை முறைப்படுத்த வேண்டும். எதிர்வரும் நாட்களில் குடிநீர் தட்டுப்பாடு இல்லாமல் சமாளிக்க முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க அனைத்து வகையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் பொதுமக்களும் குடிப்பதற்கு மட்டுமே குடிநீரை பயன்படுத்த வேண்டும். குடிநீர் வீணாவதை தடுக்க மக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றனர்.

Next Story