பள்ளி மாணவர்களை ஏற்றிக்கொண்டு குடிபோதையில் வேன் ஓட்டிய டிரைவர் கைது
பள்ளி மாணவர்களை ஏற்றிக்கொண்டு குடிபோதையில் வேனை ஓட்டிச்சென்ற டிரைவர் கைது செய்யப்பட்டார்.
போத்தனூர்,
கோவை மதுக்கரை பகுதியில் ஒரு தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களை அழைத்துச்செல்ல தனியார் வாகன உரிமையாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் வாகனங்களை இயக்கி வருகிறார்கள்.
கோவை குனியமுத்தூர் விஜயலட்சுமி மில்ஸ், நரசிம்மபுரம் பகுதியில் இருந்து நேற்று காலை மாணவர்களை ஏற்றிக்கொண்டு முருகேசன்(வயது45) என்பவர் வேனை ஓட்டி வந்தார். குடிபோதையில் இருந்த அவர் வேனை ஓட்டியதால் ரோட்டில் சென்ற மற்ற வாகனங்கள் மீது மோதுவது போல் அங்குமிங்கும் வேன் சென்றது.
அப்போது அந்த பகுதியில் ஒரு வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதி நின்றது.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் டிரைவர் முருகேசனை மடக்கி பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் குடிபோதையில் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து குனியமுத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து குடிபோதையில் வேனை ஓட்டி வந்த டிரைவர் முருகேசனை கைது செய்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசில் ஒப்படைத்தனர். போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதுகுறித்து போக்குவரத்து போலீஸ் அதிகாரிகள் கூறும்போது, பள்ளி மாணவ-மாணவிகளை அனுமதிக்கப்பட்ட பள்ளி வாகனங்களில்தான் அழைத்து செல்ல வேண்டும்.
அனுமதியில்லாமல் மாணவ-மாணவிகளை ஏற்றிச்செல்பவர்கள் மீதும், குடிபோதையில் பள்ளி வாகனங்களை ஓட்டிச்செல்பவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.
Related Tags :
Next Story