விழுப்புரம் பெட்ரோல் பங்க் மேலாளர் கொலை வழக்கில் சரணடைந்த பிரபல ரவுடியின் மகனை 4 நாட்கள் காவலில் எடுத்து போலீசார் விசாரணை


விழுப்புரம் பெட்ரோல் பங்க் மேலாளர் கொலை வழக்கில் சரணடைந்த பிரபல ரவுடியின் மகனை 4 நாட்கள் காவலில் எடுத்து போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 11 Feb 2020 4:30 AM IST (Updated: 10 Feb 2020 11:09 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் பெட்ரோல் பங்க் மேலாளர் கொலை வழக்கில் சரணடைந்த பிரபல ரவுடியின் மகனை 4 நாட்கள் காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விழுப்புரம்,

விழுப்புரத்தை சேர்ந்த பிரகா‌‌ஷ் என்பவருக்கு சொந்தமான பெட்ரோல் பங்க்கில் மேலாளராக கடலூர் பனப்பாக்கத்தை சேர்ந்த சீனிவாசன் (வயது 55) என்பவர் பணியாற்றி வந்தார். இவர் கடந்த 4-ந் தேதி பெட்ரோல் பங்க்கில் பணியில் இருந்தபோது அங்கு கார் மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த ரவுடிகள், வெடிகுண்டு வீசியும், கத்தியால் வெட்டியும் சீனிவாசனை கொலை செய்துவிட்டு தப்பிச்சென்று விட்டனர்.

இந்த சம்பவம் குறித்து விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை வலைவீசி தேடி வந்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான விழுப்புரம் கிழக்கு சண்முகபுரம் காலனியை சேர்ந்த அசார் என்கிற அன்சாருதீன் (30) கடந்த 6-ந் தேதி திருச்சி கோர்ட்டிலும், மறுநாள் (7-ந் தேதி) கடலூர் சிறையில் இருக்கும் ஆயுள் தண்டனை கைதியான விழுப்புரம் கல்லூரி சாலையை சேர்ந்த பிரபல ரவுடி இருசப்பன் என்பவரது மகன் அப்பு என்கிற கலையரசன் (28) என்பவர் தாம்பரம் கோர்ட்டிலும் சரண் அடைந்தனர்.

இவர்களில் அசார் திருச்சி சிறையிலும், அப்பு சென்னை புழல் சிறையிலும் அடைக்கப்பட்டிருந்தனர். இவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க விழுப்புரம் தாலுகா போலீசார் முடிவு செய்தனர்.

அதன்படி முதலாவதாக அப்புவை காவலில் எடுத்து விசாரிக்க விழுப்புரம் முதலாவது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் போலீசார் மனுதாக்கல் செய்தனர். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. இதற்காக சென்னை புழல் சிறையில் இருந்து அப்புவை போலீசார் விழுப்புரம் அழைத்து வந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

தொடர்ந்து, மனுவை விசாரித்த நீதிபதி அருண்குமார், அப்புவை 4 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கும்படியும், விசாரணை முடிந்து மீண்டும் 13-ந் தேதி (வியாழக்கிழமை) மாலை 5 மணிக்குள் கோர்ட்டில் ஆஜர்படுத்தும்படியும் உத்தரவிட்டார். அதன்பேரில் அப்புவை நேற்று விழுப்புரம் தாலுகா போலீசார் காவலில் எடுத்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்று அவரிடம் கொலைக்கான காரணம் என்ன? என்றும் இந்த கொலையில் யார், யார் ஈடுபட்டனர் என்பது குறித்தும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபோல் முக்கிய குற்றவாளியான அசாரையும் இன்று அல்லது நாளை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

Next Story