தடை செய்யப்பட்ட வலைகள் மூலம் மீன் பிடிப்பு: தடுக்கக்கோரி மீனவர்கள் போராட்டம்
ராமநாதபுரத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன்பிடிப்பதை தடுக்கக்கோரி மீனவர்கள் போராட்டம் நடத்தினர்.
ராமநாதபுரம்,
மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் வீரராகவ ராவ் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகள் குறித்து மனுக்கள் அளித்தனர். இதில் புதுமடம் பைத்துல்மால் நிர்வாகத்தின் சார்பில் திரளான பொதுமக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:- புதுமடம் அரசு பெண்கள் உயர் நிலைப்பள்ளிக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு உயர்நிலைப்பள்ளிக்காக தனிநபர் ஒருவர் 5 ஏக்கர் 13 சென்ட் நிலத்தை தானமாக வழங்கினார்.
இந்த நிலம் தமிழக கவர்னர் பெயரில் மாவட்ட நிர்வாகத்திடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சம்பந்தப்பட்ட நிலத்தினை சிலர் ஆக்கிரமித்து விற்பனை செய்ய முயன்று வருகின்ற னர். எனவே உடனடியாக இதனை தடுத்து நிறுத்தி அரசு பள்ளி நிலத்தை மீட்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் பிரபாகரன் தலைமையில் அளித்த மனுவில், ராமேசுவரத்திற்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. அக்னி தீர்த்தம் முதல் கடல்சார் வாரியம் வழியாக உள்ள பாரம்பரிய தீர்த்த யாத்திரை சாலை ஆக்கிரமிக்கப்பட்டு இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது. இந்த சாலையை கண்டறிந்து பக்தர்கள் வந்து செல்வதற்கு வசதியாக பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்று அதில் கூறப்பட்டிருந்தது.
மாவட்ட கடல் தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் கருணாமூர்த்தி தலைமையில் ஏராளமான மீனவர்கள் வந்து கலெக்டர் அலுவலக வளாகத்தில் முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் அளித்த மனுவில், மாவட்டம் முழுவதும் அரசால் தடைசெய்யப்பட்ட வலைகளான இரட்டைமடி, சுருக்குமடி மீன்பிடிப்பு முறை மீன்வளத்துறையினர் ஆதரவுடன் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் கடல்வளம் முழுமையாக அழிக்கப்பட்டு வருகிறது.
மேலும், அரசின் விதியை மீறி 450 குதிரைத்திறன் கொண்ட வெளிநாட்டு எந்திரங்களை பயன்படுத்தி மீன்பிடிப்பதால் பாரம்பரிய மீன்பிடிப்பிற்கு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. விதிகளை மீறி மண்டபம், கீழக்கரை பகுதியை சேர்ந்த சில விசைப்படகுகள் ஒரு கடல் மைல் தொலைவிற்குள் மீன் பிடிக்கின்றனர். இது குறித்து பலமுறை புகார் செய்தும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.
எனவே மாவட்ட நிர்வாகம் மீனவர்கள் மீது அக்கறை கொண்டு தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன்பிடிப்பதை தடுப்பதோடு, வெளிநாட்டு எந்திரம் பொருத்தப்பட்ட படகுகளின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். மேலும் மீன்வளத்துறையினர் மீன்பிடி விதிமுறைகளை கண்காணிக்க தினமும் ரோந்து செல்ல வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் வீரராகவ ராவ் இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
Related Tags :
Next Story