ஸ்ரீரங்கம் அரசு உதவிபெறும் பள்ளியில் தலைமை ஆசிரியரான மாணவி


ஸ்ரீரங்கம் அரசு உதவிபெறும் பள்ளியில் தலைமை ஆசிரியரான மாணவி
x
தினத்தந்தி 10 Feb 2020 10:30 PM GMT (Updated: 10 Feb 2020 8:59 PM GMT)

ஸ்ரீரங்கம் அரசு உதவி பெறும் பள்ளியில் தலைமை ஆசிரியராக மாணவி ஒருவர் பணியாற்றினார்.

திருச்சி,

மாணவ-மாணவிகளை ஊக்கப்படுத்தும் வகையிலும், அவர்களது ஆற்றல் மற்றும் தலைமை பண்பை வெளிக்கொணரும் வகையிலும் ஒரு மாணவரை தேர்ந்தெடுத்து அவரை அப்பள்ளியின் தலைமை ஆசிரியராக பணியாற்ற வைக்கும் நிகழ்ச்சிகள் ஆங்காங்கே நடந்து வருகிறது. அந்த வகையில் திருச்சி மாவட்டத்தில் முதன் முதலாக மாணவர் ஒருவரை தலைமை ஆசிரியராக பணியில் அமர்த்தி ஊக்கப்படுத்தும் நிகழ்ச்சி திருச்சி ஸ்ரீரங்கத்தில் கிழக்கு ரெங்கா நடுநிலைப்பள்ளியில் நேற்று நடந்தது.

அரசு உதவி பெறும் பள்ளியான இதில் மாணவ-மாணவிகள் ஏராளமானோர் படித்து வருகின்றனர். இதில் மாணவ-மாணவிகளுக்கு பொது அறிவு மற்றும் தனித்திறன் போட்டி நடத்தப்பட்டு தேர்வு செய்யப்பட்டனர். இதில் 4-ம் வகுப்பு மாணவர் விமல்ராஜ், 7-ம் வகுப்பு மாணவிகள் லோகேஸ்வரி, செல்வசங்கீதா ஆகிய 3 பேர் மாணிக்க மாணவர்களாக தேர்வாகினர்.

தலைமை ஆசிரியர்

3 பேரில் மாணவி செல்வசங்கீதா தலைமை ஆசிரியராக பணியாற்ற அனைவராலும் ஒரு மனதாக தீர்மானிக்கப்பட்டது. அவர் ஒரு மணி நேரம் தலைமை ஆசிரியராக பணியாற்ற வாய்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி அவர் நேற்று மதியம் 1 மணி முதல் 2 மணி வரை தலைமை ஆசிரியர் பொறுப்பு வகித்தார். இதற்கு, பள்ளி தலைமை ஆசிரியர் சைவராஜூ தலைமை தாங்கினார்.

பின்னர் அந்த மாணவி் ெபாறுப்பேற்று தலைமை ஆசிரியருக்கான இருக்கையில் அமர்ந்து, ஆசிரியர்கள் மற்றும் வருகைப்பதிவேடுகளை பார்வையிட்டார். மேலும் பள்ளியில் மதியம் வழங்கப்பட்ட சத்துணவின் தரத்தையும், சுற்றுப்புற தூய்மைையயும் அவர் ஆய்வு மேற்கொண்டார். சக மாணவ-மாணவிகளிடம் கலந்துரையாடினார். அவரை மாணவ-மாணவிகள் பாராட்டினர்.

பாராட்டு

மேலும், டாக்டர் அப்துல் கலாம் விஷன் அமைப்பின் தலைவர் பாலு, நல்லோர் வட்ட அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் மனோகரன், கமலி ஆகியோர் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளை பாராட்டி பேசினர். இதற்கான ஏற்பாடுகளை நல்ேலார் வட்டம், புதுசுவாசம் அமைப்பினர் செய்திருந்தனர்.

Next Story