மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: கொங்கம்பாளையம் பகுதியில் சாக்கடை கால்வாய் வசதி வேண்டும் - கலெக்டரிடம் பெண்கள் மனு
கொங்கம்பாளையம் பகுதியில் சாக்கடை கால்வாய் வசதி வேண்டும் என்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் பெண்கள் மனு கொடுத்தனர்.
ஈரோடு,
ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அதிகாரி கவிதா முன்னிைல வகித்தார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுவாக கொடுத்தனர்.
சித்தோடு அருகே உள்ள கொங்கம்பாளையம் நஞ்சப்ப நகரை சேர்ந்த பெண்கள் கலெக்டரிடம் கொடுத்திருந்த மனுவில் கூறி இருந்ததாவது:-
எங்கள் பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல போதிய சாக்கடை கால்வாய் வசதி இல்லை. இதுகுறித்து நாங்கள் பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் வீட்டின் முன்பு குட்டைபோல் தேங்கி உள்ளது. இதன் காரணமாக கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே எங்கள் பகுதியில் கழிவுநீர் தங்கு தடையின்றி செல்ல சாக்கடை கால்வாய் வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தனர்.
பவானி ஜம்பை பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரிடம் கொடுத்திருந்த மனுவில் கூறி இருந்ததாவது:-
நாங்கள் ஜம்பை ப.நல்லிபாளையம் பகுதியில் 20-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வீடுகள் கட்டி கடந்த 80 ஆண்டுகளாக வசித்து வருகிறோம். நாங்கள் அனைவரும் முறையாக மின் இணைப்பு மற்றும் குடிநீர் இணைப்பு பெற்று பஞ்சாயத்தில் வரியும் செலுத்தி வருகிறோம்.
இந்த நிலையில் கடந்த 3-ந்தேதி பவானி நெடுஞ்சாலை துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு உதவி பொறியாளர் அலுவலகத்தில் இருந்து எங்கள் அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதில் வீடுகளை காலி செய்ய வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டு உள்ளது. நாங்கள் 80 ஆண்டுகளாக இந்த பகுதியில் குடியிருந்து வருவதால் எங்களுக்கு மாற்று இடங்கள் ஏற்பாடு செய்து கொடுக்கவேண்டும். மேலும் அதுவரை நாங்கள் தொடர்ந்து அந்த இடத்தில் குடியிருக்க அனுமதி வழங்கவேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தனர்.
பவானிசாகர் அருகே உள்ள பகுத்தம்பாளையம் பாரதி நகரை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரிடம் கொடுத்திருந்த மனுவில், ‘நாங்கள் 300 இந்து குடும்பத்தினர் ஒற்றுமையுடன் பாகுபாடு இல்லாமல் பல ஆண்டுகளாக வசித்து வருகிறோம். எங்கள் ஊரில் பல இந்து கோவில்களும், குலதெய்வ ேகாவில்களும் உள்ளன. இந்த நிலையில் வேறு மதத்தை சேர்ந்த ஒருவர் எங்கள் ஊரில் அரசு நிலத்தில் குடியிருந்து வருகிறார். அவரது வீட்டில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை 20-க்கும் மேற்பட்டவர்கள் வரவழைக்கப்பட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
மேலும் அவர்கள் எங்கள் ஊரை சேர்ந்த சிலரிடம் சென்று தங்கள் மதத்திற்கு மாற கட்டாயப்படுத்தி வருகிறார்கள். இதனால் பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது. அவர்கள் இருக்கும் வீடு அரசு புறம்போக்கில் உள்ளது. அதில் சட்டத்துக்கு புறம்பாக பிரார்த்தனை செய்து வருகிறார்கள். எனவே கட்டாய மத மாற்றம் செய்ய முயற்சி செய்யும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறி இருந்தனர்.
ஈரோடு ராஜாஜிபுரம் பகுதியை சேர்ந்த சத்யா என்பவர் கலெக்டரிடம் கொடுத்திருந்த மனுவில், ‘எனது கணவர் பெயர் பாபு. எங்களுக்கு ஸ்ரீநிஷா (8), என்ற மகளும், ஹரிஸ் (6) என்ற மகனும் உள்ளனர். எனது கணவர் கூலிவேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு எனது கணவர் திடீரென மயங்கி கீழே விழுந்துவிட்டார். இதில் அவருக்கு ரத்தக்கசிவு ஏற்பட்டு தற்போது மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளார். சுவாச குழாய் மூலம் சுவாசித்து வருகிறார். எனவே டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறி வருகிறார்கள். போதிய பண வசதி இல்லாததால் நான் 2 குழந்தைகளை வைத்துக்கொண்டு மிகவும் சிரமப்பட்டு வருகிறேன். எனவே எனது கணவருக்கு சிகிச்சை அளிக்க மருத்துவ உதவி செய்ய வேண்டும்’ என்று கூறி இருந்தார்.
ஈரோடு சம்பத்நகர் பகுதியை சேர்ந்த லோகநாதன் என்பவர் கொடுத்திருந்த மனுவில், ‘ஈரோடு சம்பத்நகரில் இந்திய மருத்துவ கவுன்சில் ஹால் அருகில் ரூ.52 லட்சம் மதிப்பீட்டில் பூங்கா அமைக்கப்பட்டு உள்ளது. பல மாதங்கள் ஆகியும் இதுவரை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பூங்கா திறக்கப்படவில்லை. எனவே பூங்காவை உடனடியாக திறக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் வருகிற 24-ந்தேி பகல் 11 மணிக்கு பூங்கா முன்பு தனிநபர் கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெறும்’ என்று கூறி இருந்தார்.
ஈரோடு வில்லரசம்பட்டி பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவர் கொடுத்திருந்த மனுவில், ‘ஈரோடு மாவட்டத்தில் இயற்கை வேளாண்மை மண்டலம் அமைத்து, இளைஞர்களுக்கு நிலம் வழங்க வேண்டும். ராசாம்பாளையம் பிரிவு பகுதியில் பழுதான ரோட்டை சீரமைக்க வேண்டும்’ என்று கூறி இருந்தார்.
இதேபோல் ஏராளமானோர் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக கொடுத்தனர். மொத்தம் 250 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் கதிரவன், அதை அதிகாரிகளிடம் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார்.
அதைத்தொடர்ந்து அவர், சமூக நலம் மற்றும் சத்துணவு திட்ட துறையில் பணியின்போது உயிரிழந்தவர்களின் வாரிசுதாரர்கள் 3 பேருக்கு பணி நியமன ஆணைகளையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளி ஒருவருக்கு 3 சக்கர சைக்கிளையும் வழங்கினார். கூட்டத்தில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் தினேஷ் (பொது), மணிவண்ணன் (சத்துணவு), மாற்றுத்திறனாளிகள் நல அதிகாரி ஜெகதீசன் மற்றும் அரசு அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.
Related Tags :
Next Story