திருப்பத்தூர், கலெக்டர் அலுவலகத்தில் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்றபெண் - தாய், மகள் உள்பட 3 பேர் கைது


திருப்பத்தூர், கலெக்டர் அலுவலகத்தில் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்றபெண் - தாய், மகள் உள்பட 3 பேர் கைது
x
தினத்தந்தி 11 Feb 2020 4:00 AM IST (Updated: 11 Feb 2020 4:29 AM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற தாய், மகள், மகன் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சிவன்அருள் தலைமையில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, வேலைவாய்ப்பு, பட்டாமாறுதல், தெருவிளக்கு, கால்வாய், தார்சாலை வசதி, கல்வி உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கு இரண்டு சக்கர வாகனம், ஊன்றுகோல், காதொலி கருவி உள்பட பல்வேறு உதவிகள் கேட்டு பொதுமக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.

அவர்களிடமிருந்து 400-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டது. இந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடத்தில் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார். மாற்றுத்திறனாளிகள் தனியாக அமர வைக்கப்பட்டிருந்தனர். அவர்களிடம், அமைச்சர் நிலோபர்கபில், கலெக்டர் சிவன்அருள் ஆகியோர் நேரடியாகச் சென்று மனுக்களை பெற்றனர்.

திருப்பத்தூர்-தர்மபுரி சாலையில் உள்ள வேடியப்பன் நகர் பகுதியை சேர்ந்தவர் ராதா (வயது 45), இவரது மகள் நித்யா, மகன் தீபன் சக்கரவர்த்தி ஆகியோர் குறைதீர்வு கூட்டத்தில் மனு கொடுக்க வந்திருந்தனர். அப்போது இவர்களுடைய மைத்துனர் சிவக்குமார், ஆனந்தன், திருமால் ஆகியோர், தங்கள் வீட்டை இடித்துவிட்டு சொத்தை அபகரித்துக் கொண்டதாகக்கூறி திருப்பத்தூர் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி 3 பேரின் உடலிலும் மண்எண்ணெய் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயற்சித்தனர்.

உடனடியாக அங்கிருந்த போலீசார் தடுத்து, அவர்கள் மீது தண்ணீரை ஊற்றி டவுன் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி கைது செய்தனர். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

கூட்டத்தில் பெண்களுக்கு சிறப்பு பல் சிகிச்சை முகாம் டாக்டர் கே.செல்வகுமார் தலைமையில் நடைபெற்றது. முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர் தங்கையாபாண்டியன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் வில்சன் ராஜசேகர், அனைத்து துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

முன்னதாக கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டருடன், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் ஆலோசனை நடத்திவிட்டு வெளியே வந்தார். அப்போது, திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்த பரீதா என்ற பெண்ணின் உறவினர்கள் அவருடைய குழந்தையை எடுத்து வந்து, அமைச்சர் நிலோபர் கபிலை முற்றுகையிட்டு அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் மற்றும் செவிலியர் அலட்சியத்தால் பரீதா உயிரிழந்தார். சென்னையில் இருந்து வந்த அதிகாரிகள், டாக்டர்கள் மற்றும் நர்சு மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உரிய நிவாரணம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதனைக்கேட்ட அமைச்சர் விசாரணை நடைபெற்று வருகிறது. கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். அதைத் தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story