தேவேகவுடா பேரன் நிகில் குமாரசாமியின் திருமண நிச்சயதார்த்தம் முதல்-மந்திரி எடியூரப்பா நேரில் வாழ்த்து


தேவேகவுடா பேரன் நிகில் குமாரசாமியின் திருமண நிச்சயதார்த்தம்    முதல்-மந்திரி எடியூரப்பா நேரில் வாழ்த்து
x
தினத்தந்தி 11 Feb 2020 5:22 AM IST (Updated: 11 Feb 2020 5:22 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூரு தனியார் ஓட்டலில் முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் பேரன் நிகில் குமாரசாமி திருமண நிச்சயதார்த்தம் நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் முதல்-மந்திரி எடியூரப்பா நேரில் சென்று மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

பெங்களூரு, 

முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமி. முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் பேரனான இவர் கன்னட திரையுலகில் முன்னணி நடிகராகவும், ஜனதாதளம்(எஸ்) கட்சியின் இளைஞர் அணி தலைவராகவும் இருந்து வருகிறார். இந்தநிைலயில் தனது மகன் நிகில் குமாரசாமிக்கு திருமணம் செய்து வைக்க குமாரசாமியும், அவரது மனைவி அனிதா குமாரசாமி எம்.எல்.ஏ.வும் பெண் தேடிவந்தனர்.

இதையடுத்து, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மந்திரியும், பெங்களூரு விஜயநகர் தொகுதியின் எம்.எல்.ஏ.வுமான கிருஷ்ணப்பாவின் அண்ணன் பேத்தியான ரேவதியை திருமணம் செய்து வைக்க முடிவு எடுத்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு மல்லத்தஹள்ளியில் உள்ள ரேவதியின் வீட்டுக்கு குமாரசாமி தனது குடும்பத்துடன் சென்று பூவைத்துவிட்டு வந்தார்.

திருமண நிச்சயதார்த்தம்

இந்தநிலையில் 2 குடும்பத்தினரும் பேசி, பிப்ரவரி 10-ந் தேதி நிகிலுக்கும், ரேவதிக்கும் திருமணம் நிச்சயதார்த்தம் நடத்துவதாக முடிவு எடுத்தனர். அதன்படி நேற்று பெங்களூருவில் உள்ள தனியார் ஓட்டலில் வைத்து நிகில்- ரேவதி திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இந்த நிகழ்ச்சி நிகிலின் தாத்தா தேவேகவுடா, பாட்டி சென்னம்மா ஆகியோர் தலைமையில் நடந்தது. அப்போது நிகிலும், ரேவதியும் மாலை மாற்றிக்கொண்டனர். மேலும் இருவரும் மோதிரம் அணிவித்துக் கொண்டனர்.

எடியூரப்பா நேரில் வாழ்த்து

இந்த நிகழ்ச்சியில் முதல்-மந்திரி எடியூரப்பா நேரில் சென்று நிகில்-ரேவதி ஆகியோருக்கு வாழ்த்து தெரிவித்தார். அவருடன் மந்திரிகள் ஈசுவரப்பா, ஆர்.அசோக், பசவராஜ் பொம்மை, ஜெகதீஷ் ஷெட்டர் ஆகியோர் உடன் இருந்தனர்.

அதுபோல் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மந்திரி டி.கே. சிவக்குமார் நேரில் சென்று மணமக்களை வாழ்த்தினார். மேலும் ஜனதாதளம்(எஸ்), பா.ஜனதா, காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்த பல தலைவர்களும் இந்த திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். மேலும் திரைப்பட நடிகர்கள் சிவ ராஜ்குமார், புனித் ராஜ்குமார் உள்பட திரையுலக நடிகர்கள், நடிகைகள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நிகில், ரேவதி ஜோடிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

Next Story