மாற்றுத்திறனாளிகள் வலியுறுத்தல்; அரசு அலுவலகங்களில் சாய்வு தளங்கள் அமைக்க வேண்டும்
அரசு அலுவலகங்களுக்கு மாற்றுத்திறனாளிகள் வர வசதியாக சாய்வு தளங்கள் அல்லது மாடியில் அலுவலகங்கள் இருந்தால் லிப்ட் வசதி ஏற்படுத்த வேண்டும் என குறைதீர்வு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலையில் வருவாய் கோட்ட அளவிலான மாற்றுத் திறனாளிகள் குறைதீர்வு நாள் கூட்டம் மத்திய பஸ் நிலையம் அருகில் உள்ள சாரணிய, சாரணர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு வருவாய் கோட்ட அலுவலரின் நேர்முக உதவியாளர் ஜெயபிரகாஷ்நாராயணன் தலைமை தாங்கினார். சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார்கள் சாப்ஜான் (திருவண்ணாமலை), சர்க்கரை (கீழ்பென்னாத்தூர்), சுமதி (செங்கம்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பல்வேறு பகுதியை சேர்ந்த மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டனர்.
அப்போது அவர்கள் கூறுகையில், ‘‘திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான அரசு அலுவலகங்களில் உயர் அதிகாரிகளின் அறை முதல் மாடியில் தான் உள்ளது.
கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட முக்கிய அலுவலகங்களில் சாய்வு தளங்கள் இல்லை. எனவே மாற்றுத் திறனாளிகளின் நலனை கருத்தில் கொண்டு சாய்வு தளங்கள் அல்லது லிப்ட் வசதி அமைத்து தர வேண்டும்.
செங்கத்தில் 120 மாற்றுத் திறனாளிகள் அரிசி ரேஷன் அட்டை கேட்டு விண்ணப்பித்து உள்ளனர். 6 மாதங்களுக்கு மேலாகியும் இதுவரையில் நடவடிக்கையில் இதுகுறித்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும்.
அரசு பஸ்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு ஒரு இருக்கை ஒதுக்கப்பட்டு இருக்கும். ஆனால் மாற்றுத் திறனாளிகள் பஸ்சில் வரும் போது நடத்துனர்கள் எங்களுக்கு இருக்கையை ஒதுக்கி தருவதில்லை. மேலும் டீலக்ஸ் மற்றும் எக்ஸ்பிரஸ் பஸ்களில் மாற்றுத் திறனாளிகளை ஏற்றுவது இல்லை.
ஆரணியில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சிறப்பு பள்ளிக்கு சென்ற மாற்றுத்திறனாளி மாணவர் ஒருவர் பள்ளியின் அருகில் உள்ள குளத்தில் முழ்கி இறந்து உள்ளார். மாணவரின் சாவில் சந்தேகம் உள்ளது. மாணவரின் உடல் பாகங்கள் முன்னுரிமையில் பகுப்பாய்வு செய்ய வேண்டும்’’ என்றனர்.
சிலர் பஸ் பாஸ், உதவித் தொகை, உபகரணங்கள் கேட்டு மனு அளித்தனர். மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகள் குறித்து அரசுக்கு தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story