மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதல்: உறவினர்கள் 2 பேர் உடல் நசுங்கி பலி கயத்தாறு அருகே பரிதாபம்
கயத்தாறு அருகே மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதியதில் உறவினர்கள் 2 பேர் உடல் நசுங்கி பலியானார்கள்.
கயத்தாறு,
கயத்தாறு அருகே மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதியதில் உறவினர்கள் 2 பேர் உடல் நசுங்கி பலியானார்கள்.
உறவினர்கள்
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள சவலாப்பேரியைச் சேர்ந்தவர் திருப்பதி ராஜா (வயது 45). இவர் கார் டிரைவராக வேலை செய்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த முன்னாள் பஞ்சாயத்து தலைவர் புலித்துரை மகன் ராஜகோபால் (32). இவர் கேரள மாநிலத்தில் இரும்பு கடை நடத்தி வந்தார்.
உறவினர்களான திருப்பதி ராஜாவும், ராஜகோபாலும் அண்ணன்–தம்பி உறவுமுறை ஆவர். ராஜகோபால் கடந்த சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்தார்.
இந்த நிலையில் நேற்று மதியம் திருப்பதி ராஜா, ராஜகோபால் ஆகியோர் சவலாப்பேரி விலக்கு நாற்கரசாலை பகுதியில் உள்ள டீக்கடையில் டீ குடிப்பதற்காக ஒரு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றனர். அவர்கள் சவலாப்பேரி விலக்கு நாற்கரசாலையை கடக்க முயன்றபோது, நெல்லையில் இருந்து விளாத்திகுளம் நோக்கி சென்ற அரசு பஸ் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளின் மீது பயங்கரமாக மோதியது.
உடல் நசுங்கி பலி
கண்ணிமைக்கும் நேரத்தில் நிகழ்ந்த இந்த கோர விபத்தில் பஸ்சின் அடியில் மோட்டார் சைக்கிள் சிக்கிக் கொண்டது. இதனால் சாலையில் சிறிது தூரத்துக்கு மோட்டார் சைக்கிளை தரதரவென பஸ் இழுத்து சென்றது. இந்த சம்பவத்தில் பஸ்சின் சக்கரத்தில் சிக்கிய திருப்பதி ராஜா, ராஜகோபால் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் கூச்சலிட்டனர். விபத்தில் இறந்த 2 பேரின் உடல்களைப் பார்த்து குடும்பத்தினர், உறவினர்கள் கதறி அழுதனர். இதுகுறித்து உடனடியாக கயத்தாறு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெபராஜ், கயத்தாறு போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் முத்துராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
பின்னர் திருப்பதி ராஜா, ராஜகோபால் ஆகியோரின் உடல்களை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன.
டிரைவரிடம் விசாரணை
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்து ஏற்படுத்திய பஸ்சை ஓட்டி வந்த விளாத்திகுளம் அருகே உள்ள வெள்ளப்பட்டியைச் சேர்ந்த சங்கரேசுவரனிடம் (45) விசாரித்து வருகின்றனர். மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதிய விபத்தில் உறவினர்கள் 2 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
சவலாப்பேரி கிராமமானது நாற்கரசாலையின் இருபுறமும் உள்ளது. எனவே அங்கு நாற்கரசாலையை கடக்க முயலுகிறவர்களின் மீது வாகனங்கள் மோதி அடிக்கடி உயிரிழப்புகள் ஏற்படுகிறது. எனவே அங்கு மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.
குடும்பம்
விபத்தில் பலியான திருப்பதி ராஜாவுக்கு வசந்தி என்ற மனைவியும், ராஜேஷ் கண்ணன் (20), சதீஷ் கண்ணன் (16) ஆகிய 2 மகன்களும் உள்ளனர்.
ராஜகோபாலுக்கு கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவருடைய மனைவி பத்மா. இவர்களுக்கு கீர்த்தனா என்ற 6 மாத பெண் குழந்தை உள்ளது.
Related Tags :
Next Story