களியக்காவிளை அருகே துணிகரம்; கடையில் கடலை மிட்டாய் வாங்குவது போல் நடித்து பெண்ணிடம் நகை பறிப்பு, ஹெல்மெட் அணிந்து வந்த மர்மநபர்கள் கைவரிசை


களியக்காவிளை அருகே துணிகரம்; கடையில் கடலை மிட்டாய் வாங்குவது போல் நடித்து பெண்ணிடம் நகை பறிப்பு, ஹெல்மெட் அணிந்து வந்த மர்மநபர்கள் கைவரிசை
x
தினத்தந்தி 12 Feb 2020 5:15 AM IST (Updated: 12 Feb 2020 12:23 AM IST)
t-max-icont-min-icon

களியக்காவிளை அருகே கடையில் கடலைமிட்டாய் வாங்குவது போல் நடித்து பெண்ணிடம், ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர்கள் நகையை பறித்து சென்றனர். இந்த துணிகர சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-

களியக்காவிளை,

களியக்காவிளை அருகே உள்ள அடைக்காகுழி கரும்பிலாவிளை பகுதியை சேர்ந்தவர் வில்சன். இவருடைய மனைவி வசந்தா (வயது 50). இவர் அந்த பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இவர் வழக்கம் போல் கடையை திறந்து வியாபாரம் செய்து கொண்டிருந்தார்.

மாலையில் ஒரு மோட்டார் சைக்கிளில் 2 மர்ம நபர்கள் ஹெல்மெட் அணிந்தவாறு கடைக்கு வந்தனர். அவர்கள், வசந்தாவிடம் பேச்சுக்கொடுத்தனர். பின்னர் ரூ.10 கொடுத்து கடலை மிட்டாய் வாங்குவதுபோல் நடித்தனர்.

உடனே வசந்தா அவர்களுக்கு மிட்டாய் எடுத்து கொடுக்க முயன்றார். அப்போது, ஒரு வாலிபர் திடீரென வசந்தாவின் கழுத்தில் கிடந்த 1½ பவுன் சங்கிலியை பறித்தார். இதில் சுதாரித்துக் கொண்ட வசந்தா சங்கிலியை பிடித்துக் கொண்டு திருடன்... திருடன் என்று சத்தம் போட்டார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்குள் அந்த வாலிபர், நகையை பறித்து கொண்டு மோட்டார் சைக்கிளில் தயாராக நின்ற கூட்டாளியுடன் வேகமாக தப்பிச் சென்றுவிட்டார்.

இதுபற்றி வசந்தா களியக்காவிளை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story