மூதாட்டி கொலையில் திருப்பம்: நகைக்காக பேரனே கொலை செய்தது அம்பலம் உடந்தையாக இருந்த சிறுவனும் சிக்கினான்


மூதாட்டி கொலையில் திருப்பம்:   நகைக்காக பேரனே கொலை செய்தது அம்பலம்   உடந்தையாக இருந்த சிறுவனும் சிக்கினான்
x
தினத்தந்தி 12 Feb 2020 4:15 AM IST (Updated: 12 Feb 2020 12:54 AM IST)
t-max-icont-min-icon

ஆவடியில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கொலை செய்து பணம், நகையை திருடிய வழக்கில் பேரன் கைது செய்யப்பட்டார்.

ஆவடி,

ஆவடி அடுத்த கன்னபாளையம் ஒத்தவாடை தெருவை சேர்ந்தவர் மல்லிகா (வயது 56). ஓய்வு பெற்ற ராணுவ வீரரான இவரது கணவர் பார்த்தசாரதி ஏற்கனவே இறந்து விட்டார். குழந்தைகள் இல்லை. இந்த வீட்டில் மல்லிகா மட்டும் தனியாக வசித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 7-ந்தேதி மல்லிகாவின் உறவினரான மீனாட்சி என்பவர் மல்லிகாவின் வீட்டிற்கு அவரை பார்ப்பதற்காக வந்துள்ளார். அப்போது வீட்டின் சமையலறையில் மல்லிகா இறந்த நிலையில் பிணமாக கிடந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த மீனாட்சி அலறியடித்து கொண்டு வெளியே வந்தார்.

இது குறித்து மீனாட்சி ஆவடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்ததும், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆவடி போலீஸ் இன்ஸ்பெக்டர் காளிராஜ் விசாரணையில் ஈடுபட்டார். விசாரணையில், மல்லிகாவை கொலை செய்துவிட்டு அவரது கழுத்தில் இருந்த சங்கிலி, கம்மல், மூக்குத்தி உள்பட 15 பவுன் நகைகளையும், வீட்டில் இருந்த ரூ.30 ஆயிரத்தையும் கொலையாளிகள் திருடிவிட்டு தப்பிச்சென்றது தெரியவந்தது.

2 பேர் கைது

அதன்பின்னர், மல்லிகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார். இதைத்தொடர்ந்து, அம்பத்தூர் துணை கமிஷனர் ஈஸ்வரன் உத்தரவின் பேரில், ஆவடி சரக போலீஸ் உதவி கமிஷனர் சத்தியமூர்த்தி மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் காளிராஜ் உள்ளிட்ட தனிப்படை போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர்.

இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக செங்குன்றம் அடுத்த ரெட்டேரி பாரதி தெருவை சேர்ந்த கோகுல் (19), சென்னை பட்டாளம் போகிபாளையம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகிய இருவரையும் நேற்று கைது செய்தனர்.

போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் பல திடுக்கிடும் சம்பவங்கள் வெளிவந்துள்ளது.

அதாவது, கடந்த 6-ந்தேதி இரவு கொலையான மல்லிகாவின் அக்காள் லோகேஸ்வரியின் மகளான பிரியாவின் மகன் கோகுல் மல்லிகாவின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

கழுத்தை நெரித்து...

அப்போது, மல்லிகாவிடம் ‘உனக்கு யாருமே இல்லை பென்ஷன் மற்றும் பணத்தை வைத்துக்கொண்டு என்ன செய்யப் போகிறாய்? எனது அம்மா உடல்நிலை சரியில்லாமல் அவதிப்படுவதால் பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். அப்போது கோகுலுக்கு பணம் தர மல்லிகா மறுத்ததாக தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த கோகுலும், உடன் வந்த 17 வயது சிறுவனும் சேர்ந்து மல்லிகாவை கழுத்தை நெரித்து சுவற்றில் தலையை மோதி உள்ளனர். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த மல்லிகா, ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துள்ளார்.

அதன் பின்னர் இருவரும் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இதையடுத்து கோகுல் சென்னை அயனாவரத்தில் உள்ள அவரது உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

கைது

இந்நிலையில் மல்லிகாவின் இறுதி ஊர்வலத்தில் கோகுல் கலந்து கொள்ளாமல் தலைமறைவாகி உள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் கோகுலை பிடித்து விசாரணை செய்தனர். அப்போது தனது பாட்டியை நண்பருடன் சேர்ந்து அடித்து கொலை செய்ததை போலீசாரிடம் அவர் ஒப்புக்கொண்டார். கோகுல் கொடுத்த தகவலின் அடிப்படையில், சிறுவனையும் பிடித்தனர்.

இதையடுத்து ஆவடி போலீசார் 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோகுலை சிறையில் அடைத்தனர்.

கோகுலின் நண்பரான 17 வயது சிறுவனை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர். பண ஆசையால் இளம் வயது சிறுவன் பாட்டியை அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story