மாவட்ட செய்திகள்

டி.என்.பி.எஸ்.சி. முறைகேடு குறித்து ‘சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டால் மிகப்பெரிய புள்ளிகள் சிக்குவார்கள்’ திருச்சி சிறைக்கைதியின் வக்கீல்கள் பரபரப்பு தகவல் + "||" + TNPSC Abuse CBI If an inquiry is ordered The biggest points will get stuck

டி.என்.பி.எஸ்.சி. முறைகேடு குறித்து ‘சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டால் மிகப்பெரிய புள்ளிகள் சிக்குவார்கள்’ திருச்சி சிறைக்கைதியின் வக்கீல்கள் பரபரப்பு தகவல்

டி.என்.பி.எஸ்.சி. முறைகேடு குறித்து ‘சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டால் மிகப்பெரிய புள்ளிகள் சிக்குவார்கள்’ திருச்சி சிறைக்கைதியின் வக்கீல்கள் பரபரப்பு தகவல்
டி.என்.பி.எஸ்.சி. முறைகேடு குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டால் மிகப்பெரிய புள்ளிகள் சிக்குவார்கள் என்று திருச்சி சிறையில் உள்ள கைதி தவமணியின் வக்கீல்கள் பரபரப்பு தகவல்களை தெரிவித்துள்ளனர்.
திருச்சி,

தமிழகத்தில் டி.என்.பி.எஸ்.சி. நடத்திய குரூப்-4, குரூப்-2ஏ தேர்வு முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சி.பி.சி.ஐ.டி. போலீசார், புரோக்கர் ஜெயக்குமார் உள்பட 25-க்கும் மேற்பட்டவர்களை கைது செய்துள்ளனர். தொடர்ந்து வினாத்தாள் விற்பனை செய்யப்பட்டது முதல் பல முறைகேடுகள் குறித்து திடுக்கிடும் தகவல்கள் தினமும் வெளியாகி கொண்டே இருக்கிறது. இதனால், சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் விசாரணையும் வேகம் பிடித்துள்ளது.


சென்னை டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தில் கார் டிரைவராக பணியாற்றிய, கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்த தவமணி என்பவர் கடந்த 2012-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். தற்போது அவர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர், டி.என்.பி.எஸ்.சி. முறைகேடு குறித்து சில உண்மைகளைகூற நேற்று தனது வக்கீல்கள் மூலம் பத்திரிகையாளர்களை சந்திக்க செய்தார்.

தவமணி தரப்பு வக்கீல்கள் ரவிச்சந்திரன், செல்லப்பன் கூறியதாவது:-

2012-ம் ஆண்டு நடைபெற்ற குரூப்-2 தேர்வில் ஈரோடு மாவட்டம் பவானியை சேர்ந்த பூங்கொடி என்ற பெண் தேர்வு மையத்தில் பறக்கும் படையினரால் கைது செய்யப்பட்டார். தேர்வுக்கு முன்கூட்டியே வினாத்தாளை பணம் கொடுத்து பெற்றுக்கொண்டு தேர்வு எழுதியதாக குற்றஞ்சாட்டப்பட்டது. அப்போதே அந்த பெண் பல எதிர்பாராத உண்மைகளை கூறியும் சில நபர்கள் மட்டுமே கைது செய்யப்பட்டனர். அதாவது தவமணி, சிவகுரு மற்றும் ரவிக்குமார் ஆகிய 3 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டனர். ஆனால், 30 பேர் உடந்தையாக இருந்ததாக சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு தெரிந்தும் மற்றவர்கள் கைது செய்யப்படவில்லை.

தற்போது அந்த 30 பேரில் ஒருவரான புரோக்கர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். அப்போதே 30 பேரையும் கைது செய்திருந்தால், 2012-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை இந்த அளவுக்கு முறைகேடு நடந்திருக்காது. இந்த இடைப்பட்ட காலத்தில் முறைகேட்டில் ஈடுபட்டு வெற்றி பெற்றவர்கள் அரசு துறைகளில் மிகப்பெரிய பதவிகளில் பணியாற்றி வருகிறார்கள்.

தவமணி தனக்கு மனசாட்சி உறுத்தியதால் சிறை விதிமுறைப்படி, சிறையில் இருந்தவாறே வழக்கு நடக்கும் கோர்ட்டுக்கும், சென்னை ஐகோர்ட்டுக்கும், அவர் மீது வழக்குப்பதிவு செய்த சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கும், மாவட்ட கலெக்டருக்கும் முறைகேட்டில் ஈடுபட்ட நபர்கள் குறித்து மனுக்கள் அனுப்பியும் நடவடிக்கை இல்லை. அவர் குறிப்பிட்ட அதே நபர்கள்தான் மிகப்பெரிய அளவில் பணம் பெற்றுக்கொண்டு இந்த முறைகேட்டை மிகத்தெளிவாக செய்து இருக்கிறார்கள். ஆனால் தற்போது அடிமட்ட நபர்களை மட்டும் பெயரளவுக்கு கைது செய்கிறார்கள். முக்கிய பதவியில் இருப்பவர்களை குற்றவாளிகள் என தெரிந்தும் கைது செய்ய சி.பி.சி.ஐ.டி. போலீசார் தயக்கம் காட்டுவதால், அவர்கள் துணையுடன் சுதந்திரமாக சுற்றி வருகிறார்கள்.

2007-ம் ஆண்டு தவமணி பணியில் சேர்ந்து 2012-ம் ஆண்டுவரை சுமார் 800 பேரிடம் பணம் பெற்றுக்கொண்டு அரசு வேலையில் சேர்த்திருக்கிறார். அவரை கைது செய்யும்போது அவரது வீட்டில் இருந்து ரூ.81½ கோடி பறிமுதல் செய்யப்பட்டது. சாதாரண டிரைவரே இவ்வளவு தொகை முறைகேட்டில் சம்பாதித்திருக்கிறார் என்றால், அதே டி.என்.பி.எஸ்.சி.யில் உயர் பதவியில் இருப்பவர்கள் 1 லட்சம் பேருக்கு மேல் வேலைவாங்கி கொடுத்து பல ஆயிரம் கோடிக்கு மேல் சம்பாதித்திருப்பார்கள்.

சி.பி.சி.ஐ.டி. போலீசார் சிலவற்றை மூடி மறைக்க, வழக்கை திசைதிருப்பி காலம் கடத்திவர பார்க்கிறார்கள். எனவே, டி.என்.பி.எஸ்.சி. முறைகேடு குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். அப்போதுதான் உண்மையை கண்டறிந்து அரசியல் பிரமுகர்கள், அரசுத்துறையில் பணியாற்றும் உயர் அதிகாரிகள் என மிகப்பெரிய முக்கிய புள்ளிகள் சிக்குவார்கள்.

மேலும் டி.என்.பி.எஸ்.சி.யில் பணியாற்றும் அதிகாரிகள் இருக்கும்வரை முறைகேடு தொடரும். எனவே, டி.என்.பி.எஸ்.சி. தேர்வாணையத்தை எடுத்து விட்டு, யு.பி.எஸ்.சி. மூலமே தேர்வு நடத்தப்பட வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. டி.என்.பி.எஸ்.சி. முறைகேடுகளை தடுக்க ரூ.5 கோடியில் நவீன தொழில்நுட்பம் - சட்டசபையில் அமைச்சர் ஜெயக்குமார் அறிவிப்பு
டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் முறைகேடுகள் நடக்காமல் தடுக்க ரூ.5 கோடியில் நவீன தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்தார்.
2. டி.என்.பி.எஸ்.சி. முறைகேடு வழக்கில் குரூப்-4 தேர்வு விடைத்தாள்களை திருத்த உதவிய கார் டிரைவர் கைது
டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடு வழக்கில் குரூப்-4 தேர்வு விடைத்தாள்களை திருத்துவதற்காக உதவிய கார் டிரைவர் கைது செய்யப்பட்டார்.