பெரம்பலூரில் அனுமதியின்றி கட்டப்பட்டு வரும் புதிய வணிக வளாகத்திற்கு `சீல்' அதிகாரிகள் நடவடிக்கை


பெரம்பலூரில் அனுமதியின்றி கட்டப்பட்டு வரும் புதிய வணிக வளாகத்திற்கு `சீல் அதிகாரிகள் நடவடிக்கை
x
தினத்தந்தி 11 Feb 2020 10:30 PM GMT (Updated: 11 Feb 2020 8:01 PM GMT)

பெரம்பலூரில் அனுமதியின்றி கட்டப்பட்டு வரும் புதிய வணிக வளாகத்திற்கு நகர் மற்றும் ஊரமைப்புத்துறை அதிகாரிகள் ‘சீல்' வைத்தனர்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் வெங்கடேசபுரத்தில் ஒரு சூப்பர் மார்க்கெட் அருகே அண்ணாமலை காந்தி என்பவருக்கு சொந்தமான இடத்தில் கீழ்தளம், தரைதளம் மற்றும் 3 அடுக்கு வணிகவளாகத்தின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்தது. இந்த புதிய வணிகவளாக கட்டுமானமானது வணிக கட்டிடம்- நகர ஊரமைப்பு சட்டம் 1971 பிரிவு 49-ன் கீழ் பெறவேண்டிய தொழில்நுட்ப முன்அனுமதி பெறாமல் நடைபெற்று வந்தது. இதுகுறித்து ஊரமைப்புத்துறை உதவி இயக்குனர், முறையான அனுமதி பெற்று கட்டுமான பணிகளை தொடருமாறும், இல்லாவிட்டால் பணிகளை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கட்டிட உரிமையாளருக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 15-ந் தேதியும், கடந்த மாதம் 23-ந் தேதியும் என இருமுறை நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

அதனை பொருட்படுத்தாமல் கட்டிடத்தின் கட்டுமான பணிகள் தொடர்ந்ததால், நகர், ஊரமைப்புத்துறை உதவி இயக்குனர் ஸ்ரீதர் தலைமையில், துறை அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் நேற்று காலை புதிதாக கட்டப்பட்டுவரும் வணிகவளாகத்திற்கு சென்றனர். அங்கு பணிநிறுத்துவதற்கான உத்தரவை அமல்படுத்தும் வகையில் நகர் ஊரமைப்பு சட்டம் 1971 பிரிவு 57(4)-ன் கீழ் பூட்டி முத்திரையிடப்படுவதாக தெரிவிக்கும் தகவல் பிரசுரத்தை ஒட்டி கட்டிடத்திற்கு ‘சீல்' வைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனல் அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Next Story