நெருக்கடிக்கு பணிந்தார் எடியூரப்பா புதிய மந்திரிகளின் இலாகாக்கள் ஒரே நாளில் மாற்றம் ஆனந்த்சிங்கிற்கு வனம்-சுற்றுச்சூழல், பி.சி.பட்டீலுக்கு விவசாயம்


நெருக்கடிக்கு பணிந்தார் எடியூரப்பா   புதிய மந்திரிகளின் இலாகாக்கள் ஒரே நாளில் மாற்றம்   ஆனந்த்சிங்கிற்கு வனம்-சுற்றுச்சூழல், பி.சி.பட்டீலுக்கு விவசாயம்
x
தினத்தந்தி 12 Feb 2020 3:45 AM IST (Updated: 12 Feb 2020 1:49 AM IST)
t-max-icont-min-icon

முதல்-மந்திரி எடியூரப்பா நெருக்கடிக்கு பணிந்து, புதிய மந்திரிகளின் இலாகாக்களை ஒரே நாளில் மாற்றம் செய்துள்ளார். ஆனந்த்சிங்கிற்கு வனம்-சுற்றுச்சூழலும், பி.சி.பட்டீலுக்கு விவசாயத்துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு,

கர்நாடகத்தில் கடந்த 6-ந் தேதி மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்பட்டது. புதிதாக 10 மந்திரிகள் பதவி ஏற்றனர். அவர்களுக்கு 4 நாட்களுக்கு பிறகு நேற்று முன்தினம் இலாகாக்கள் ஒதுக்கப்பட்டன. ரமேஷ் ஜார்கிகோளிக்கு நீர்ப்பாசனம், பி.சி.பட்டீலுக்கு வனம், எஸ்.டி.சோமசேகருக்கு கூட்டுறவு, பைரதி பசவராஜுக்கு நகர வளர்ச்சி, சிவராம் ஹெப்பாருக்கு தொழிலாளர் நலன், சுதாகருக்கு மருத்துவ கல்வி, நாராயணகவுடாவுக்கு நகரசபை நிர்வாகம், தோட்டக்கலை, பட்டு வளர்ச்சி, ஆனந்த்சிங்கிற்கு உணவு மற்றும் பொதுவிநியோகம், ஸ்ரீமந்த் பட்டீலுக்கு ஜவுளி, கோபாலய்யாவுக்கு சிறிய தொழில்கள் மற்றும் சர்க்கரை ஆகிய துறைகள் ஒதுக்கப்பட்டன.

இதில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட துறைகளால் திருப்தி அடையாத மந்திரிகளான பி.சி.பட்டீல், ஆனந்த்சிங், சிவராம் ஹெப்பார், ஸ்ரீமந்த் பட்டீல் உள்ளிட்டோர் கடும் அதிருப்தி அடைந்தனர். இதுகுறித்து முதல்-மந்திரி எடியூரப்பாவை நேரில் சந்தித்த அவர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட துறைகளை மாற்ற வேண்டும் என்று நெருக்கடி கொடுத்தனர். இந்த நெருக்கடிக்கு எடியூரப்பா பணிந்துள்ளார்.

பி.சி.பட்டீலுக்கு விவசாயம்

இதையடுத்து சில மந்திரிகளுக்கு ஒதுக்கப்பட்ட துறைகளை எடியூரப்பா மாற்றியுள்ளார். இதற்கு கவர்னர் அனுமதி வழங்கியுள்ளார். அதன்படி, மந்திரி பி.சி.பட்டீலுக்கு விவசாயத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. அவரிடம் இருந்த வனத்துறை வாபஸ் பெறப்பட்டு, ஆனந்த்சிங்கிற்கு வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை வழங்கப்பட்டுள்ளது.

ஸ்ரீமந்த் பட்டீலுக்கு ஜவுளி, கைத்தறி, சிறுபான்மையினர் நலன், கோபாலய்யாவுக்கு உணவு, பொதுவிநியோகம், நுகர்வோர் விவகாரம், பைரதி பசவராஜுக்கு நகர வளர்ச்சியுடன் கர்நாடக நகர குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் வாரியம், கர்நாடக நகர கட்டமைப்பு வளர்ச்சி நிதி கழகம் ஆகியவை ஒதுக்கப்பட்டுள்ளது. பி.சி.பட்டீலுக்கு விவசாயத்துறையும், சிவராம் ஹெப்பாருக்கு தொழிலாளர் நலத்துறையுடன் சர்க்கரை துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது.

பசவராஜ் பொம்மை

இதில் போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மைக்கு கூடுதலாக வழங்கப்பட்ட விவசாயத்துறை அவரிடம் இருந்து பறிக்கப்பட்டுள்ளது. மந்திரி சி.சி.பட்டீலிடம் இருந்த சுற்றுச்சூழல் துறையை வாபஸ் பெற்று ஆனந்த்சிங்கிற்கு வழங்கப்பட்டுள்ளது. கால்நடைத்துறை மந்திரி பிரபுசவானிடம் இருந்து சிறுபான்மையினர் நலன் வாபஸ் பெறப்பட்டு, ஸ்ரீமந்த் பட்டீலுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

Next Story