ஜனதா தளம்(எஸ்) கட்சியை யாராலும் ஒழிக்க முடியாது தேவேகவுடா பேச்சு


ஜனதா தளம்(எஸ்) கட்சியை யாராலும் ஒழிக்க முடியாது   தேவேகவுடா பேச்சு
x
தினத்தந்தி 12 Feb 2020 4:15 AM IST (Updated: 12 Feb 2020 1:51 AM IST)
t-max-icont-min-icon

ஜனதா தளம்(எஸ்) கட்சியை யாராலும் ஒழிக்க முடியாது என்று தேவேகவுடா கூறினார்.

பெங்களூரு, 

ஜனதா தளம்(எஸ்) கட்சியின் தேசிய மாநாடு பெங்களூரு அரண்மனை மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தேசிய தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவேகவுடா கலந்து கொண்டு பேசியதாவது:-

நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் எங்கள் கட்சிக்கு ஏற்பட்ட தோல்விக்கு இப்போது பதிலளிக்க மாட்டேன். கர்நாடகத்தில் ஜனதா தளம்(எஸ்) கட்சியை யாராலும் ஒழிக்க முடியாது. 1989-ம் ஆண்டு என்னையே கட்சியை விட்டு நீக்கினர். அப்போது நண்பர்கள் யாரும் எனக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. யாரும் பண உதவியும் செய்யவில்லை. உறவினரின் வீட்டை விற்று கட்சியை கட்டமைத்தேன்.

பயப்பட்டது இல்லை

கட்சியை பலப்படுத்தி 1994-ம் ஆண்டு மாநில தலைவரானேன். அப்போது பெரிதாக யாரும் எனக்கு உதவி செய்யவில்லை. பி.ஜி.ஆர்.சிந்தியா உள்ளிட்ட ஒரு சிலர் மட்டுமே எனக்கு உதவி செய்தனர். அதன் பிறகு என் மீது வழக்கு போட்டனர். வழக்கை கண்டு நான் பயப்பட்டது இல்லை.

கட்சிக்கு உயிரை விட தயாராக இருப்பவர்களை கொண்டு கட்சியை பலப்படுத்தும் பணியை செய்வேன். எனக்கு வயதாகிவிட்டது. ஆனால் கட்சி பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளேன். 2023-ம் ஆண்டு ஜனதா தளம்(எஸ்) கட்சியை மீண்டும் ஆட்சி கட்டிலில் அமர்த்துவேன். அதற்காக போராட நான் தயாராக உள்ளேன்.

அழைத்து வர வேண்டும்

அப்போது ஜனதா பரிவாரில் இருந்த தலைவர்கள் பலர் இன்று வேறு கட்சிகளில் உள்ளனர். அவர்களை ஒருங்கிணைத்து மீண்டும் கட்சிக்கு அழைத்து வர வேண்டும் என்று சிலர் எனக்கு ஆலோசனை கூறியுள்ளனர். இதற்கான முயற்சியில் நான் ஈடுபடுவேன். இந்த ஆண்டு இறுதிக்குள் அத்தகைய தலைவர்களை கட்சிக்கு அழைத்து வருவேன்.

காங்கிரஸ் மற்றும் பா.ஜனதாவில் எனது நண்பர்கள் பலர் உள்ளனர். அவர்களுக்கு அந்த கட்சியில் நீடிக்க விருப்பம் இல்லை. சிலர் ஆட்சி அதிகாரத்திற்கு பயந்து அந்த கட்சியில் உள்ளனர். அவர்கள் சொன்னதை தான் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். கட்சியை பலப்படுத்த நான் என்ன வேண்டுமானாலும் செய்ய தயாராக உள்ளேன்.

கைவிட மாட்டேன்

மந்திரிகளுக்கு பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. கட்சிக்கு விசுவாசமாக இருக்கும் தொண்டர்களை நான் எப்போதும் கைவிட மாட்டேன். வரும் நாட்களில் 45 ஆயிரம் பெண்களை ஒருங்கிணைத்து மகளிர் மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளேன். டெல்லியில் கெஜ்ரிவால் 3-வது முறையாக ெவற்றி பெற்றுள்ளார். மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை அவர் செயல்படுத்தினார். அதனால் அவரை மக்கள் ஆதரித்துள்ளனர்.

பா.ஜனதாவினர் வளர்ச்சியை மறந்து குடியுரிமை திருத்த சட்டம் குறித்து அதிகமாக பேசினர். பா.ஜனதா பெரிய தேசிய கட்சி. ஆனால் மக்கள், அக்கட்சியை நிராகரித்துள்ளனர். ஆம் ஆத்மி கட்சியின் வெற்றி நமக்கு உத்வேகம் அளிப்பதாக உள்ளது. நமது கட்சி நிர்வாகிகள் அனைவரும் ஒரு தாய் பிள்ளைகள்போல் ஒற்றுமையாக இருந்து கட்சியை பலப்படுத்தும் பணிகளில் தீவிரமாக ஈடுபட வேண்டும்.

இவ்வாறு தேவேகவுடா பேசினார்.

இந்த மாநாட்டில் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Next Story