ரெயிலில் அசுத்தமான குடிநீர் வினியோகித்த ஒப்பந்த ஊழியருக்கு 10 நாள் ஜெயில் ரத்னகிரி கோர்ட்டு தீர்ப்பு


ரெயிலில் அசுத்தமான குடிநீர் வினியோகித்த   ஒப்பந்த ஊழியருக்கு 10 நாள் ஜெயில்   ரத்னகிரி கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 12 Feb 2020 3:30 AM IST (Updated: 12 Feb 2020 2:10 AM IST)
t-max-icont-min-icon

திருநெல்வேலி-ஜாம்நகர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் அசுத்தமான குடிநீர் வினியோகித்த ஒப்பந்த ஊழியருக்கு 10 நாள் சிறை தண்டனை விதித்து ரத்னகிரி கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

மும்பை,

திருநெல்வேலியில் இருந்து ஜாம்நகர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் முதல் வகுப்பு பெட்டியில் பயணிகளுக்கு அசுத்தமான குடிநீர் வினியோகிக்கப்படுவதாக கொங்கன் ரெயில்வே அதிகாரி கீரிஷ் கரந்திகருக்கு புகார் வந்தது. இந்த புகார் குறித்து விசாரணை நடத்த அவர் போலீசாருக்கு உத்தரவிட்டார்.

அதன்பேரில் போலீசார் அந்த ரெயிலில் கண்காணித்து வந்தனர். இதில் ரத்னகிரி ரெயில் நிலையத்தில் அந்த ரெயிலின் முதல் வகுப்பு பெட்டியில் ஏறிய ஆசாமி ஒருவர், சீல் வைக்கப்படாத பாட்டீல் மூலம் பயணிகளுக்கு குடிநீர் வினியோகித்து வந்ததை கண்டனர். உடனே அந்த வாலிபரை போலீசார் பிடித்து விசாரித்தனர்.

10 நாள் ஜெயில்

இதில், அவர் ராஜ்கோட்டை சேர்ந்த ஒப்பந்த ஊழியரான ரவீந்திரா வியாஸ் (வயது30) என்பதும், ரெயில் பெட்டியில் கைகழுவும் பைப்பில் இருந்து தண்ணீரை பாட்டீலில் நிரப்பி விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ரவீந்திரா வியாசை கைது செய்து, அவர் மீது ரத்னகிரி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கின் இறுதி கட்ட விசாரணையில், அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து கோர்ட்டு, அவருக்கு 10 நாள் ஜெயில் தண்டனையும், ரூ.1,500 அபராதமும் விதித்து உத்தரவிட்டது.

Next Story