சிவ்போஜன் உணவகத்துக்கு போட்டியாக ரூ.30-க்கு மதிய உணவு வழங்கும் திட்டம் பா.ஜனதா தொடங்கியது


சிவ்போஜன் உணவகத்துக்கு போட்டியாக   ரூ.30-க்கு மதிய உணவு வழங்கும் திட்டம்   பா.ஜனதா தொடங்கியது
x
தினத்தந்தி 11 Feb 2020 10:45 PM GMT (Updated: 11 Feb 2020 9:40 PM GMT)

சிவ்போஜன் உணவகத்துக்கு போட்டியாக ரூ.30-க்கு மதிய உணவு வழங்கும் திட்டத்தை பா.ஜனதா தொடங்கியது.

மும்பை, 

சட்டசபை தேர்தலின் போது சிவசேனா தனது தேர்தல் அறிக்கையில் ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் ரூ.10-க்கு மதிய உணவு வழங்க மலிவு விலை உணவகங்கள் தொடங்கப்படும் என்று தெரிவித்தது. அதன்படி அந்த கட்சி தேசியவாத காங்கிரஸ், காங்கிரசுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்து உள்ள நிலையில் ரூ.10-க்கு மதிய உணவு வழங்கும் திட்டத்தை ‘சிவ் போஜன்' என்ற பெயரில் செயல்படுத்தி உள்ளது.

முதற்கட்டமாக மாநிலம் முழுவதும் 50 இடங்களில் இந்த மலிவு விலை உணவகங்கள் திறக்கப்பட்டு உள்ளன. இதில் 2 சப்பாத்தி, 150 கிராம் அரிசி சாதம், ஒரு கப் பருப்பு குழம்பு, 100 கிராம் காய்கறி கூட்டு வழங்கப்படுகிறது.

ரூ.30-க்கு மதிய சாப்பாடு

இந்த நிலையில், சிவசேனாவின் இந்த திட்டத்துக்கு போட்டியாக பாரதீய ஜனதா 'தீனதயாள்' என்ற பெயரில் ரூ.30-க்கு மதிய உணவு வழங்கும் உணவகத்தை தொடங்கி உள்ளது.

மறைந்த ஜனசங்க தலைவர் தீனதயாள் உபாத்யாய நினைவு நாளையொட்டி சோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள ஆன்மிக சுற்றுலா தலமான பண்டர்பூரில் உள்ள பிரசித்தி பெற்ற விட்டல் சாமி கோவில் அருகில் இந்த மலிவு விலை உணவகத்தை நேற்று அந்த கட்சி தொடங்கி உள்ளது.

இந்த உணவகத்தை முன்னாள் மந்திரி சுபாஷ் தேஷ்முக் தொடங்கி வைத்தார். இந்த உணவகம் குறித்து பாரதீய ஜனதா தலைவர் ஒருவர் கூறியதாவது:-

தீனதயாள் மலிவு விலை உணவகத்தில் ரூ.30-க்கு 3 சப்பாத்திகள், ஒரு கிண்ணம் அரிசி சாதம், 2 வகை கூட்டு, வேர்க்கடலை சட்னி, மாங்காய் ஊறுகாய் ஆகியவை வழங்கப்படும். இந்த மலிவு விலை உணவகம் படிப்படியாக மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இதுபற்றி காங்கிரசை சேர்ந்த மந்திரி அஸ்லம் சேக் கூறுகையில், ‘மற்றவர்கள் செயல்படுத்தும் திட்டத்தை காப்பியடிக்கும் பழக்கம் பாரதீய ஜனதாவுக்கு உள்ளது’ என்றார்.

Next Story