இடஒதுக்கீடு பாதிக்கப்படாமல் இருக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன் - துரைமுருகன் எம்.எல்.ஏ. பேட்டி
இடஒதுக்கீடு பாதிக்கப்படாமல் இருக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறேன் என்று துரைமுருகன் எம்.எல்.ஏ. கூறினார்.
காட்பாடி,
விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் காட்பாடியில் ரூ.16 கோடியே 45 லட்சம் மதிப்பில் புதிய விளையாட்டு அரங்கம் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த கட்டுமான பணிகளை வேலூர் கலெக்டர் சண்முகசுந்தரம், துரைமுருகன் எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன் ஆகியோர் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அப்போது அவர்கள் கட்டிட வரைப்படத்தை பார்வையிட்டு, பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்கள். ஆய்வுக்கு பின்னர் துரைமுருகன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-
டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது, ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்தபோது 110 விதியின் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். ஆனால் அதனை செயல்படுத்தவில்லை. அதுபோல் தான் இந்த அறிவிப்பும் உள்ளது. இந்த அறிவிப்பு செயல் வடிவத்துக்கு வரட்டும், அதன்பின்னர் பார்க்கலாம். வருங்காலங்களில் தமிழகத்தில் விவசாயிகளுக்கு எதிராக எந்த திட்டங்களையும் செயல்படுத்த மாட்டோம் என்று வெறும் பேச்சளவில் அறிவித்துள்ளனர்.
டெல்லி சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதாவிற்கு பின்னடைவு என்பது வழக்கமான ஒன்றுதான். நாடாளுமன்ற தேர்தலில் மட்டும் பாரதீய ஜனதா அதிக இடங்களை பெற்றார்கள். அதன்பின்னர் நடந்த அனைத்து மாநில தேர்தல்களிலும் அவர்களுக்கு பின்னடைவே ஏற்பட்டுள்ளது. இடஒதுக்கீடு பாதிக்கப்படாமல் இருக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறேன். டி.என்.பி.எஸ்.சி., கிராம நிர்வாக அலுவலர் ஆகிய தேர்வுகளில் முறைகேடு நடந்துள்ளது. அத்திகாயை பிளந்தால் சொத்தையை போல ஊழல் ஒவ்வொன்றும் வெளிவர தொடங்கி உள்ளது. எல்லாத்துறைகளிலும் ஊழல் காணப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story