தேர்வு சரியாக எழுதாததை கண்டித்ததால் பேராசிரியர் முன்பு வி‌‌ஷம் குடித்த மாணவர் கொள்ளிடம் அருகே பரபரப்பு


தேர்வு சரியாக எழுதாததை கண்டித்ததால் பேராசிரியர் முன்பு வி‌‌ஷம் குடித்த மாணவர் கொள்ளிடம் அருகே பரபரப்பு
x
தினத்தந்தி 11 Feb 2020 10:24 PM GMT (Updated: 11 Feb 2020 10:24 PM GMT)

கொள்ளிடம் அருகே அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் தேர்வு சரியாக எழுதாததை கண்டித்த பேராசிரியர் முன்பு மாணவர் வி‌‌ஷம் குடித்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

கொள்ளிடம்,

நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே புத்தூரில் சீனிவாசா சுப்பராயா அரசு பாலிடெக்னிக் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் சிவில் பட்டய வகுப்பு பாடப்பிரிவில் கடலூர் மாவட்டம் சிதம்பரம் இந்திரா நகரை சேர்ந்த செல்வம் மகன் பிரேம்குமார்(வயது 20) இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

நேற்று காலை சிவில் பட்டய வகுப்புக்கான தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை பிரேம்குமார் சரியாக எழுதவில்லை என தெரிகிறது. இதையடுத்து துறைத்தலைவர் பாலசுப்பிரமணியன், பிரேம்குமாரை கண்டித்தார்.

இதனால் மனவேதனை அடைந்த பிரேம்குமார், பூச்சிக்கொல்லி மருந்தை(வி‌‌ஷம்) பேராசிரியர், மாணவர்கள் எதிரிலேயே குடித்தார். உடனே பேராசிரியர் மற்றும் மாணவர்கள், பிரேம்குமாரிடம் இருந்து வி‌‌ஷபாட்டிலை பறித்து தூக்கி வீசினர்.

குறைந்த அளவிலான வி‌‌ஷத்தை குடித்ததால் பிரேம்குமார், கொள்ளிடத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து கல்லூரி மாணவர்கள் 100-க்கும் மேற்பட்டோர் கல்லூரி வாசல் முன்பு மாணவர் வி‌‌ஷம் குடிக்க காரணமான பேராசிரியரை கண்டித்து கோ‌‌ஷங்கள் எழுப்பினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கொள்ளிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வனிதா, சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து மாணவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து இரண்டாம் ஆண்டு சிவில் பட்டய வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நேற்று முதல் விடுமுறை அளிக்கப்பட்டு, வருகிற 17-ந் தேதி மீண்டும் வகுப்பு நடைபெறும் என்று கல்லூரி முதல்வர் அறிவித்தார்.

பேராசிரியர் கண்டித்ததால் அவர் முன்பு மாணவர் வி‌‌ஷம் குடித்த சம்பவம் கொள்ளிடம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story