பெட்ரோல் பங்க் மேலாளர் கொலை: முக்கிய குற்றவாளி அசாரை காவலில் எடுத்து போலீசார் விசாரணை


பெட்ரோல் பங்க் மேலாளர் கொலை: முக்கிய குற்றவாளி அசாரை காவலில் எடுத்து போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 11 Feb 2020 10:37 PM GMT (Updated: 11 Feb 2020 10:37 PM GMT)

பெட்ரோல் பங்க் மேலாளர் கொலை வழக்கில் சரண் அடைந்த முக்கிய குற்றவாளி அசாரை காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விழுப்புரம், 

விழுப்புரம் கம்பன் நகரில் உள்ள பெட்ரோல் பங்க்கில் மேலாளராக பணியாற்றி வந்த சீனிவாசன் (வயது 55) என்பவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு ரவுடிகள் சிலர், வெடிகுண்டு வீசியும், கத்தியால் வெட்டியும் கொலை செய்தனர்.

இதுகுறித்து விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்த நிலையில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான விழுப்புரம் கிழக்கு சண்முகபுரம் காலனியை சேர்ந்த அசார் என்ற அன்சாருதீன் (30) திருச்சி கோர்ட்டிலும், விழுப்புரம் கல்லூரி சாலையை சேர்ந்த அப்பு என்கிற கலையரசன் (28) தாம்பரம் கோர்ட்டிலும் சரண் அடைந்தனர். இவர்களில் அப்புவை நேற்று முன்தினம் போலீசார், காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே முக்கிய குற்றவாளியான அசாரையும் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் தாக்கல் செய்த மனு நேற்று விழுப்புரம் முதலாவது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

இதற்காக திருச்சி சிறையில் இருந்த அசாரை நேற்று போலீசார் விழுப்புரம் அழைத்து வந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். தொடர்ந்து, மனுவை விசாரித்த நீதிபதி அருண்குமார், அசாரை 4 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கியதோடு, விசாரணை முடிந்த பின் அவரை வருகிற 14-ந் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்குள் மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தும்படியும் உத்தரவிட்டார்.

இதையடுத்து அசாரை நேற்று போலீசார் காவலில் எடுத்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்று பெட்ரோல் பங்க் மேலாளர் சீனிவாசன் கொலைக்கான காரணம் என்ன? என்றும், கொலையில் யார், யார் ஈடுபட்டனர் என்பது குறித்தும் துருவி, துருவி விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையின் முடிவில் சீனிவாசனின் கொலைக்கான முழு விவரமும் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

Next Story