27 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் வேலைநிறுத்த கடிதம்


27 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் வேலைநிறுத்த கடிதம்
x
தினத்தந்தி 12 Feb 2020 4:28 AM IST (Updated: 12 Feb 2020 4:28 AM IST)
t-max-icont-min-icon

27 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்த அறிவிப்பு கடிதத்தை அதிகாரியிடம் வழங்கினர்.

நெய்வேலி, 

நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தில் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இவர்கள் பணிநிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட 27 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பலகட்ட போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

இது தொடர்பாக பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றும், சுமூக தீர்வு காணப்படவில்லை. இதையடுத்து ஒப்பந்த தொழிலாளர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பினர் நேற்று முன்தினம் நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் தொடர்ச்சியாக ஒப்பந்த தொழிலாளர்கள் தொழிற்சங்க கூட்டமைப்பை சேர்ந்த சி.ஐ.டி.யு. ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கம், தொ.மு.ச., அண்ணா தொழிலாளர் ஊழியர் ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கம், பாட்டாளி தொழிற்சங்கம், தொழிலாளர்கள் வாழ்வுரிமை சங்கம், ஐ.என்.டி.யூ.சி., தொழிலாளர் விடுதலை முன்னணி ஆகிய சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் என்.எல்.சி. தலைமை அலுவலகத்தில் மனித வளத்துறை துணை பொது மேலாளர் சிவராஜிடம் நேற்று வேலைநிறுத்த அறிவிப்பு கடிதத்தை வழங்கினர்.

இது தொடர்பாக ஒப்பந்த தொழிலாளர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு நிர்வாகிகள் கூறுகையில், அறிவிப்பு கடிதம் கொடுத்ததில் இருந்து 15 நாட்களுக்குள் நிர்வாகம் ஒப்பந்த தொழிலாளர்களின் கோரிக்கைகளை ஏற்று சுமூகமான தீர்வை ஏற்படுத்திட வேண்டும். இல்லையெனில் வருகிற 25-ந்தேதி இரவு பணி முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர்.

Next Story