ஸ்மார்ட் சிட்டி என்றுகூறி 3 ஆண்டுகளாக ஒரு திட்டத்தைக்கூட நிறைவேற்றவில்லை அதிகாரிகள் மீது எம்.எல்.ஏ.க்கள் பாய்ச்சல்


ஸ்மார்ட் சிட்டி என்றுகூறி 3 ஆண்டுகளாக ஒரு திட்டத்தைக்கூட நிறைவேற்றவில்லை அதிகாரிகள் மீது எம்.எல்.ஏ.க்கள் பாய்ச்சல்
x
தினத்தந்தி 11 Feb 2020 11:26 PM GMT (Updated: 11 Feb 2020 11:26 PM GMT)

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் கடந்த 3 ஆண்டு களாக ஒரு திட்டத்தைக்கூட நிறைவேற்றவில்லை என்று எம்.எல்.ஏ.க்கள் குற்றஞ்சாட்டினார்கள்.

புதுச்சேரி,

ஸ்மார்ட் சிட்டி தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று தலைமை செயலகத்தில் அமைச்சர் நமச்சிவாயம் தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்ட தலைவரான தலைமை செயலாளர் அஸ்வனிகுமார் கலந்துகொள்ளாததை கண்டித்து காங்கிரஸ், அ.தி.மு.க., தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர்.

வெளிநடப்பினை தொடர்ந்து முதல்-அமைச்சரின் பாராளுமன்ற செயலாளரான லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-

ஸ்மார்ட் சிட்டி டெவலப்மெண்ட் கார்ப்பரேசனுக்கு தலைமை செயலாளர்தான் தலைவர். ஆனால் அவர் இந்த கூட்டத்துக்கு வரவில்லை. கவர்னர் அழைத்ததாககூறி சென்றுள்ளார்.

தலைவர் இல்லாமல் இந்த கூட்டத்தை நடத்தி பயனில்லை. அவர் கையெழுத்திடாமல் எந்த திட்டமும் நிறைவேறப்போவதில்லை. ஸ்மார்ட் சிட்டி திட்டம் வந்து 3 வருடமாகியும் இதுவரை ஒரு திட்டம் கூட முழுமையாக நிறைவேற்றப்படவில்லை.

இதற்கு தலைமை செயலாளர்தான் முழு காரணம். இந்த திட்டம் தொடர்பான கோப்புகள் அமைச்சருக்கு போகாது. தலைமை செயலாளர் வராததை கண்டித்து நாங்கள் வெளிநடப்பு செய்தோம்.

இந்த கூட்டம் நடக்கிறது என்பதை நன்கு தெரிந்தே அவர் கவர்னரிடம் போகிறார். மக்கள் பிரச்சினை, மக்களுக்கான திட்டங்களை அவர் மதிப்பதில்லை. மக்கள் நல திட்டங்கள் எதுவும் நடக்கக்கூடாது என்பதில் தலைமை செயலாளர் தெளிவாக உள்ளார். இவ்வாறு லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ. கூறினார்.

அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. கூறியதாவது:-
ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கு மத்திய அரசு 2 ஆண்டுகளுக்கு முன்பே அனுமதி கொடுத்துவிட்டது. ரூ.160 கோடி நிதியும் தந்துள்ளது. ஆனால் புதுவை அரசு தனது பங்கு நிதியை தரவில்லை. எம்.எல்.ஏ.க்களை அழைத்து திட்டம் தொடர்பாக ஆலோசிக்கவில்லை.

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தொகுதிகளை திட்டமிட்டு புறக்கணிக்கிறார்கள். முதலியார்பேட்டை தொகுதியில் 6 வார்டுகள் உள்ளன. அங்கு பணிகளை செய்யாமல் அதைத்தாண்டி உள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ.வின் தொகுதிக்கு திட்டங்களை கொண்டு செல்கிறார்கள்.

இது சம்பந்தமாக எம்.எல்.ஏ.க்களின் கருத்துகளை கேட்கவில்லை. கூட்டம் தொடர்பாக 3 முறை அறிவிப்பு வெளியிட்டு அதை ரத்து செய்தார்கள். இந்த முறை கூட்டத்துக்கு தலைமை செயலாளர் வரவில்லை.

திட்டத்தின் தலைவரான அவர் இல்லாமல் யாரிடம் பேசுவது? தொடர்ந்து மக்கள் பிரதிநிதிகளை அவமதிக்கிறார்கள். நகரப்பகுதியில் பல குடிசைகள் உள்ளன. அவற்றை கல்வீடுகளாக கட்டி கொடுக்க திட்டம் இல்லை.

ஆனால் ஆங்காங்கே கழிப்பறை கட்டுவது, சைக்கிள் சவாரி தொடங்குவது போன்றவற்றில் ஆர்வம் காட்டுகிறார்கள். இப்போது கண்துடைப்புக்காக கூட்டம் கூட்டுகிறார்கள். மத்திய அரசிடமிருந்து பணத்தை பெற்று அதை வேறு திட்டங்களுக்கு பயன்படுத்துகிறார்கள். இவ்வாறு அன்பழகன் எம்.எல்.ஏ. கூறினார்.

முன்னதாக கூட்டத்தில் கலந்துகொண்டு காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜெயமூர்த்தி பேசும்போது, ஸ்மார்ட்சிட்டி திட்டத்துக்கு ரூ.160 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் ரூ.3 கோடிதான் செலவிடப்பட்டுள்ளது. அதுவும் சம்பளத்துக்காகத்தான் செலவிடப்பட்டுள்ளது.

எங்கு எந்த திட்டம் வருகிறது என்பது எங்களுக்கே தெரியவில்லை. எம்.எல்.ஏ.க்களிடமும் எதுவும் கேட்கவில்லை. எந்த திட்டத்தையும் செயல்படுத்தாதற்கு அலுவலகம் எதற்கு? ஏ.சி. எதற்கு? என்று அதிகாரிகளை பார்த்து அதிரடியாக கேள்வி எழுப்பினார்.

Next Story